US air force  reuters
உலகம்

US air force முதல் FBI வரை... அடுத்தடுத்து சைபர் தாக்குதல்! நிலைக்குலைந்து நிற்கும் அமெரிக்கா

அமெரிக்க ராணுவத்தின் Cloud One தளத்தில் சைபர் தாக்குதல்: முக்கிய தகவல்கள் ஆபத்தில்!

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களைச் சேமித்து வைக்கும் கிளவுட் கணினி தளத்தை ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் முக்கிய கிளவுட் கட்டமைப்பான 'Cloud One' தளத்தில் இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்க ராணுவத்தின் முக்கியத் தகவல்கள் ஆபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

US air force

அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய கிளவுட் தளங்களில் ஒன்றாக Cloud One செயல்பட்டு வருகிறது. இதில் ராணுவ நடவடிக்கைகள், வீரர்கள் தொடர்பான விவரங்கள், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான முக்கியத் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் இந்தத் தளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர். கணினி அமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது இந்த சைபர் தாக்குதல் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. இதனால் Cloud One தளத்தின் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவின் துறைமுகங்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறைமுகங்கள், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஹேக்கர்கள் குறிவைத்து வருகின்றனர். குறிப்பாக, பழைய கணினி கட்டமைப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

US air force

இந்த சைபர் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான், வடகொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய குழுக்கள் இருக்கலாம் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அனைத்து தாக்குதல்களுக்கும் இந்த நாடுகளே காரணம் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் முக்கியத் தகவல் தரவுத்தளத்திலும் ஊடுருவல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றப் பின்னணி, கைது வாரண்ட் மற்றும் பின்னணிச் சரிபார்ப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் National Crime Information Center (NCIC) என்ற தரவுத்தளத்தில் இந்த ஊடுருவல் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக FBI விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஊடுருவலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள், தகவல்கள் திருடப்பட்டுள்ளனவா அல்லது மாற்றப்பட்டுள்ளனவா என்பது இதுவரை தெரியவில்லை.