கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார். இந்த நிலையில், கிரீன்லாந்து உலகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
பனி படர்ந்த கடினமான கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்யூட் சமூகத்தினர் குடியேறியதற்கு தொல்பொருள் சான்றுகள் உள்ளன. தற்போதைய கிரீன்லாந்து மக்கள் கி.பி 1200களில் குடிபெயர்ந்த தூலே கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என்று நம்பப்படுகிறது.
அதே காலகட்டத்தில், எரிக் தி ரெட் தலைமையில் ஐஸ்லாந்தைச் சேர்ந்த நார்ஸ்மென் மக்கள் அங்கு வந்துள்ளனர். 1500ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் மர்மமான முறையில் காணாமல் போனது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. காணாமல் போன நார்ஸ்மென் மக்களை தேடி வந்த ஹான்ஸ் எகெடே மூலம் 18ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சி இங்கு வேரூன்றியது.
1953 வரை காலனியாக இருந்த கிரீன்லாந்து, பிறகு டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது. 1979 மற்றும் 2008இல் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்புகள் மூலம் கிரீன்லாந்து படிப்படியாக தன்னாட்சி அதிகாரத்தை பெற்றது. தற்போது வெளியுறவு, பாதுகாப்பு தவிர மற்ற உள்நாட்டு விவகாரங்களை கிரீன்லாந்தே கவனித்துக்கொள்கிறது.
இந்த சூழலில் கிரீன்லாந்து தீவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவது சர்வதேச அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காலனி ஆட்சிக்காலத்தின் கசப்பான நினைவுகள் தற்போது கிரீன்லாந்து மக்களிடம் சுதந்திர வேட்கையை அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவா, டென்மார்க்கா என்ற கேள்வி எழுந்தால் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம் என்று கிரீன்லாந்தின் தற்போதைய பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.