பிரான்ஸில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இமானுவேல் மேக்ரோன், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில், அதிபரின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிஷேல் பார்னியர் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்ததால், ஆட்சியை பறிகொடுத்தார்.
பிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியேர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, தீவிர வலதுசாரி ஆதரவுடன், 577 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மையான 331 எம்.பி.க்கள், நேற்று இரவு அரசாங்கத்தை வெளியேற்ற வாக்களித்தனர். 1962இல் சார்லஸ் டிகோல் அதிபராக இருந்தபோது ஜார்ஜஸ் பாம்பிடோவின் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கு பிறகு பார்னியேரின் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
தேசிய சட்டமன்ற சபாநாயகர் Yael Braun Pivet, ”புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” எனவும், பிரான்ஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழ்வதை அனுமதிக்க முடியாது எனவும் அதிபரை வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில் அடுத்த பிரதமர் யார், அவரை எவ்வளவு விரைவில் அதிபர் நியமிப்பார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது பிரதமர் லிஸ்ட்டில் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு மற்றும் அதிபரின் கூட்டாளியான ஃபிராங்கோயிஸ் பெய்ரூ ஆகியோர் உள்ளனர். அதேநேரத்தில் பிரான்ஸ் அரசியலில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின.