நவீன வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த உக்ரைன்-ரஷ்யா போர், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
நவீன வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த உக்ரைன்-ரஷ்யா போர், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை இன்று உலகளாவிய அமைதிக்கான பெரும் சவாலாக மாறியுள்ளது. உக்ரைன் போரைப் பற்றி ஒரு தொகுப்பைப் பார்க்கலாம். நான்கு ஆண்டுகாலப் போரில் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. சிலதரவுகளின்படி, உக்ரைனில் இந்தப் போரால் கடந்த 4 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களையும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. குறிப்பாக, உக்ரைனை இருளில் மூழ்கடிக்கும் நோக்கில், அந்நாட்டின் 80 சதவீதத்துக்கும் அதிகமான மின்னுற்பத்தி நிலையங்களை ரஷ்யா குறிவைத்துத் தகர்த்துள்ளது. இதனால் உறைபனிக் குளிரில் மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவிக்கும் சூழல் உருவானது. பீரங்கிகளுடன் தொடங்கிய இந்தப் போர், 2026இல் செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன் போராக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் 'அமெரிக்காவே முதன்மை' கொள்கை மாற்றத்தால் ராணுவ உதவிகள் குறைந்தாலும், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்குப் பின்னால் அணி திரண்டுள்ளன. கிரீமியா மற்றும் டான்பாஸ் பகுதிகளை மீட்காமல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என உக்ரைன் உறுதியாக உள்ளது. பல தசாப்தங்களுக்கு உலகஅரசியலை மாற்றியமைக்கப் போகும் இந்தப் போர், எப்போது முடிவுக்கு வரும் என்பது இன்றும் விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது.