பணயக்கைதிகள் ராய்ட்டர்ஸ்
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் | 2வது கட்டமாக 4 பணயக்கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 2வதுகட்டமாக 4 பணயக்கைதிகளை ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது.

பணயக்கைதிகள்

அடுத்தகட்டமாக ஹமாஸ் அமைப்பு இன்று (ஜனவரி 25), தங்கள் பிடியில் உள்ள 4 பணயக் கைதிகளை விடுவிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன்படி, அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் பட்டியலில், இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகியோா் இடம்பெற்றனா்.

இவர்கள் அனைவரும் இன்று (ஜன.25), முறைப்படி காஸா செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காஸா நகர சதுக்கத்தில் ஹமாஸால் முதலில் மேடைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர், ராணுவச் சீருடையில் நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். அதேநேரத்தில், இந்த நால்வருக்குப் பதிலாக, இஸ்ரேல் 200 பாலஸ்தீனிய ஆண் கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காஸா மக்கள்

இந்தப் பட்டியலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 121 கைதிகளும், ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஃபத்தா உள்ளிட்ட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 79 பேரும் உள்ளனர். அவர்களில் இருவருக்கு 15 வயது மற்றும் மூத்தவருக்கு வயது 69. விடுவிக்கப்பட்ட கைதிகளில் எழுபது பேர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பாலஸ்தீனிய கைதிகள் அலுவலகம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.