பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தவிர, 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசியது. ஆனால், இதை இந்திய ராணுவம் வழிமறித்து தகர்த்தது. இதனால் இருதரப்பில் மாறிமாறி தாக்குதல்கள் நடைபெற்றன.
எனினும், இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கையே மேலோங்கி இருந்தது. இதற்கிடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததில், இரு நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்ததது. இதைத் தொடர்ந்து, உலகில் பலரும் இந்திய ராணுவத்தின் சிறப்புகளையும் செயல்பாடுகளையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் இந்திய ராணுவத்தைப் பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தான் செயல்களையும் விமர்சித்துள்ளார்.
தற்போது அமெரிக்க எண்டர்பிரைஸ் மையத்தின் மூத்த உறுப்பினராக உள்ள ஏ.என்.ஐக்கு அளித்துள்ள பேட்டியில், “தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது. தூதரக அளவில் என்றால், பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு பற்றியே அனைவரின் கவனமும் தற்போது உள்ளது. ராணுவ அளவில் என்றால், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத உட்கட்மைப்புகளைத் துல்லியமுடன் இலக்காகக் கொண்டு இந்தியா தாக்கியது.
உண்மையில், அந்நாடு படுதோல்வியைச் சந்தித்தது. அதை, பாகிஸ்தான் ராணுவம் மறைக்க முடியாது. இந்தியா, வான்வழி தாக்குதலை நடத்தியதும், இரு கால்களுக்கு இடையே வாலை நுழைத்துக்கொண்டு செல்லும் பயந்து போன ஒரு நாயைப் போன்று, போர் நிறுத்தம் வேண்டும் என கோரி பாகிஸ்தான் ஓடியது. சீருடையில் இருந்த பாகிஸ்தானிய அதிகாரிகள், பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டது என்பது, ஒரு பயங்கரவாதிக்கும், ஐ.எஸ்.ஐ. உறுப்பினர் ஒருவருக்கும் அல்லது பாகிஸ்தானிய ஆயுத படைக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என காட்டுகிறது.
இருப்பினும், இப்போது கேள்வி என்னவென்றால், பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யும் என்பதுதான். எப்படியாகினும் பாகிஸ்தான் இராணுவத்திற்குள் ஒரு பிரச்னை உள்ளது என்பது தெளிவாகிறது. ஒரு இராணுவமாக அது திறமையற்றது. தவிர, அசிம் முனீர் தனது வேலையைத் தக்க வைத்துக்கொள்ளப் போகிறாரா, பாகிஸ்தான் ஜெனரல்களின் ஈகோ பாகிஸ்தான் சமூகத்தின் எதிர்கால வலிமையையும் நல்வாழ்வையும் நசுக்குமா எனப் பல கேள்விகள் எஞ்சியுள்ளன. அடிப்படையில், பாகிஸ்தான் தன் நாட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்ய முடியாதளவுக்கு, மிகவும் தூரம் சென்றுவிட்டார்களோ எனவும் தோன்றுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.