"இந்தியா எனது அமைதியான வீடு" - ராணுவ வீரர்களைப் பாராட்டிய ரஷ்ய பெண்மணி.. #ViralVideo
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் கூடாரங்களை இரவோடு இரவாக அழித்தது. இதற்குப் பழிதீர்க்க எண்ணிய பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. எனினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை முன்பே கணித்திருந்த இந்திய ராணுவம், அவற்றை வான் பாதுகாப்பு அழித்தொழித்து வெற்றி கண்டது. இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்த்திற்குப் பிறகு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் முயற்சிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதை அழித்ததையொட்டி, இந்திய ராணுவத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், அவர்களை நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் இந்திய ராணுவத்தைப் பாராட்டியுள்ளார். ”நம்மைப் பாதுகாத்து இரவில் நிம்மதியாக தூங்க உதவும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் மிகவும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், தன்னை ’ரஷ்ய பனியா’ என்று அழைத்துக் கொள்ளும் போலினா, ரஷ்யாவில் உள்ள தனது பாட்டி தாக்குதல் (இந்தியா - பாகிஸ்தான்) செய்தியைப் பார்த்து வீடு திரும்பச் சொன்னதை நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “இந்திய இராணுவம் சிறந்த மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளது. ரஷ்யாவே அவற்றை வழங்கியுள்ளது. அனைத்து ட்ரோன்கள் அல்லது ஜெட் விமானங்கள் என எதையும் எதிர்த்துப் போராட இது மிகவும் வலுவாக உள்ளது. இந்திய வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்பையும், பெரிய இதயங்களையும் கொண்டுள்ளனர். அதனால்தான் இரவில் நாம் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்ததாலேயே, நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை வாழ்கிறோம். மேலும் எதுவும் நடப்பதை (போர்) நாங்கள் கவனிக்கவே இல்லை. அவர்களின் அர்ப்பணிப்புக்கு நான் என்றும் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மேலும், இந்தியாவை எனது அமைதியான வீடு என்று அழைக்க முடியும்” என அதில் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த தாக்குதலின் போது போலினா, இந்தியாவின் குர்கானில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ, 15,000க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் 149,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், இந்திய பயனர்களின் பல்வேறு பாராட்டுக்குரிய பதிவுகளையும் பெற்று வருகிறது. அதில் ஒரு பயனர், “வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் நமது ஆயுதப் படைகள் மீது இவ்வளவு அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதைப் பார்ப்பது மிகவும் மனதைக் கவர்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.