உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாக உருவெடுப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் முன்னணி நிதி இதழான ஃபோர்ப்ஸ் (Forbes), 40 வயதிற்குட்பட்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் இடம்பிடித்து உலகையே வியக்க வைத்துள்ளனர்.
அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதைப் பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அங்குர் ஜெயின். 3.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் 19-வது இடத்தில் உள்ளார். நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'பிட்ல் ரிவார்ட்ஸ்' (Bilt Rewards) நிறுவனத்தின் நிறுவனரான இவர், மக்கள் செலுத்தும் வீட்டு வாடகைக்கு ரிவார்ட்ஸ் புள்ளிகளை வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து நேரடியாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நபர் நிகில் கமத். 3.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20-வது இடத்தில் உள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இவர், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகத் தளமான 'ஸெரோதா' (Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். எளிய முதலீட்டு முறைகள் மூலம் இந்திய நிதிச் சந்தையில் இவர் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இப்பட்டியலில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பது 22 வயதே ஆன சூர்யா மிதா மற்றும் ஆதர்ஷ் ஹிரேமத் ஆகிய இரு இளைஞர்கள் தான். சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 'மெர்கோர்' (Mercor) என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கிய இவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு தலா 2.2 பில்லியன் டாலர்கள். 2023-ல் தொடங்கப்பட்ட இவர்களது நிறுவனம், வெறும் ஓராண்டில் 10 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சி, இந்திய இளைஞர்களை உலக அரங்கில் மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. எந்தவொரு குடும்பப் பின்னணியும் இன்றி, தங்களின் சொந்தத் திறமையால் சாதித்துள்ள இந்த நான்கு இளைஞர்களும் இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.