செய்தியாளர் - ராஜ்குமார். ர
இஸ்ரேல் நோக்கிச் சென்ற Flydubai விமானத்தில், துணை விமானி கேப்டனை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் ஈரான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai FZ1073 விமானத்தில், துணை விமானி கேப்டனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. விமானத்தின் உயரமும் வேகமாகக் குறைந்த நிலையில், பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் இணைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் இஸ்ரேல் செல்லாமல் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 174 பேரும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தின்போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பயணிகளின் உயிரைக் காக்கப் போராடிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? தாக்குதலுக்கான காரணம் என்ன? இதில் தீவிரவாதத் தொடர்பு இருக்கிறதா? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் விமானத்தை பயணிகளுடன் சேர்த்து தரையில் மோதி வெடிக்க செய்யும் நோக்கத்துடன் நடந்த பயங்கரவாத முயற்சி நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, விமானத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் துணை விமானி தீவிர இஸ்லாமிய சித்தாந்தத்தால் தீவிரமயமாக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்தச் சம்பவத்துக்கு ஈரான் தொடர்பு உள்ளதா என்பதை உறுதி செய்வது தற்போது மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், UAE அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தாக்குதலின் நோக்கம் என்ன? இதற்கு ஏதேனும் பயங்கரவாதத் தொடர்பு அல்லது முன்கூட்டிய திட்டமிடல் இருந்ததா? என்பதையும் விசாரணைக் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்-இடம் Flydubai சம்பவத்துக்குப் பின்னால் ஈரான் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஈரானுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், ஈரான் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருந்தது உறுதி செய்யப்பட்டால், “மிகக் கடுமையாகத் தாக்கப்படும்” என்று trumb எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால்... இப்போதைக்கு ஈரான் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருந்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ உறுதி வெளியாகவில்லை. இந்நிலையில் trumb ஈரானை மிக கடுமையாக தாக்குவோம் என எச்சரிக்கை விடுதிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.