\
Iran Celebrates US Exit From Iraq End
IraqReuters

வெளியேறிய அமெரிக்கப் படைகள்.. மகிழ்ச்சியில் ஈரான்.. ஈராக்கிற்கு காத்திருக்கும் அடுத்த சவால்!

அமெரிக்க படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறியது ஈரானின் வரலாற்று வெற்றி என்று IRGC தெரிவித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈராக்கில் இருந்து அமெரிக்காவின் கடைசிப் படைகளும் வெளியேறிய நிலையில், இந்த நடவடிக்கையை தங்களது வெற்றியாக ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. அதே நேரத்தில், அமெரிக்கா தனது 12 ஆண்டுகால ISIS எதிர்ப்பு ராணுவப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2003-ல் சதாம் உசேன் ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தது. 2011-ல் அமெரிக்கப் படைகள் வெளியேறின. ஆனால் 2014-ல் ISIS அமைப்பு ஈராக்கின் மிகப்பெரிய பகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் படைகளை அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக Operation Inherent Resolve என்ற ISIS எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தற்போது அந்த நடவடிக்கை, ஈராக்கில் முடிவுக்கு வந்துள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி எர்பில் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் மற்றும் உபகரணங்களும் வெளியேறியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை IRGC வேறு விதமாகப் பார்க்கிறது. அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியது சாதாரண ராணுவ நடவடிக்கை அல்ல என்றும், அமெரிக்காவை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் IRGC கூறியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை வரவேற்றுள்ளது.

ஈராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறியது பெரும் சாத்தான் மேற்கு ஆசியாவில் இருந்து படிப்படியாக வெளியேறுவதற்கான தொடக்கம் என்று IRGC தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் வெளியேற்றம் ஈராக் மக்களின் விருப்பம் மற்றும் ஈராக் அரசின் நடவடிக்கையால் ஏற்பட்டது என்றும், இதை வரலாற்று வெற்றி என்றும் IRGC கூறியுள்ளது.

குறிப்பாக, ஈரான் தனது எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அடையாளங்களாக கருதும் காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளித் தலைவர் Abu Mahdi al-Muhandis ஆகியோரின் மரணத்தையும் இந்த நிகழ்வுடன் இணைத்து பார்க்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கிறார். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்ததன் முக்கிய நோக்கம் ISIS அமைப்பை எதிர்ப்பதே என்றும், அந்தப் பணி முடிந்துவிட்டதால் அமெரிக்க வீரர்கள் நாடு திரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வெளியேற்றத்தை அவர் அமெரிக்கா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கும் வெற்றியாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறையும் ISIS அமைப்பு ஈராக்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவ சக்தியாக செயல்படும் திறனை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையில், ஈராக்கின் பாதுகாப்பு பொறுப்பு பெருமளவில் அந்நாட்டு அரசாங்கத்தின் கைகளுக்கு சென்றுள்ளது.

ISIS அமைப்பின் எஞ்சியுள்ள குழுக்கள் மீண்டும் வலுப்பெறுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. மேலும் ஈரானுடன் நெருக்கமான ஆயுதக் குழுக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதும் ஈராக் அரசுக்கு முக்கிய சவாலாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com