FLYDUBAI REUTERS
உலகம்

FLYDUBAI தாக்குதல் சம்பவம்! துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்! வெளியாகும் பகீர் பின்னணி!

இஸ்ரேல் நோக்கிச் சென்ற Flydubai விமானத்தில், துணை விமானி கேப்டனை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், துணை விமானி குறித்த அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai FZ1073 விமானத்தில், துணை விமானி கேப்டனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. விமானத்தின் உயரமும் வேகமாகக் குறைந்த நிலையில், பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் இணைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் இஸ்ரேல் செல்லாமல் சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 174 பேரும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தின்போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பயணிகளின் உயிரைக் காக்கப் போராடிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Flydubai சம்பவத்தில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துணை விமானி குறித்து தற்போது அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

PM Modi & Captain Smit Machchhar

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்... இவரைப் பற்றிய பின்னணித் தகவல்கள்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஹமாம் அல்-ஹம்மாமி, இதற்கு முன்பு ஓமன் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏர்-ல் பணியாற்றியதாகவும், கடந்த 2024ஆம் ஆண்டு அவரது தீவிரவாதக் கருத்துகள் தொடர்பாக பாதுகாப்பு கவலைகள் எழுந்ததால், விமானப் பயிற்சிப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர், அவருக்கு அதே நிறுவனத்தில் அலுவலகப் பணி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஓமனில் விமானம் இயக்குவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் ராயல் ஏர் மாரோக் (Royal Air Maroc) விமான நிறுவனத்திலும் பணியாற்றியதாகவும், சுமார் 8 மாதங்களுக்கு முன்புதான் Flydubai நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது இணையதள மற்றும் சமூக வலைதளக் கணக்குகளில் தீவிரவாத அமைப்புகள் தொடர்பான உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தாக்குதலுக்கான நோக்கம் என்ன? இது திட்டமிட்ட தாக்குதலா? இதில் பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் சின் பெட் (Shin Bet), மொசாட் (Mossad) உள்ளிட்ட அமைப்புகளும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

flydubai

மேலும், ஏற்கெனவே ஒரு விமான நிறுவனத்தில் பாதுகாப்பு கவலைகள் எழுந்ததாகக் கூறப்படும் ஒருவர், பின்னர் மற்றொரு விமான நிறுவனத்தில் பணியாற்றி, இஸ்ரேல் செல்லும் விமானத்தின் துணை விமானியாக எப்படி நியமிக்கப்பட்டார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆனால்... இந்தச் சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் குறித்து விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.