இங்கிலாந்தின் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்று, எம்.ஐ.6. இது, இங்கிலாந்தின் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனமாகும். இது தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதிலும் வெளியுறவுக் கொள்கையை ஆதரிப்பதிலும் மேலும் அதுதொடர்பான தகல்களைச் சேகரிப்பதும் கவனம் செலுத்தி வருகிறது.1909இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, உலகம் முழுவதும் ரகசியமாக இயங்குகிறது மற்றும் வெளியுறவுச் செயலாளருக்கு அறிக்கை செய்கிறது. பயங்கரவாதம், சைபர் தாக்குதல்கள் மற்றும் விரோத நாடுகள் போன்ற அச்சுறுத்தல்களில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது. உள்நாட்டு உளவுத்துறையைக் கையாளும் MI5 போலல்லாமல், MI6 வெளிநாட்டில் மட்டுமே வேலை செய்கிறது. எம்ஐ 6, ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் புனைகதைகளில் பிரபலமாக சித்தரிக்கப்பட்டது.
இந்த நிலையில் MI6 அமைப்பின் முதல் பெண் தலைவராக பிளேஸ் மெட்ரெவேலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் 115 ஆண்டுகால வரலாற்றில் பெண் தலைமை தாங்குவது இதுவே முதல் முறை ஆகும். அவர் தற்போது இயக்குநர் ஜெனரல் 'Q' ஆக பணியாற்றுகிறார். MI6இல் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை மேற்பார்வையிடுகிறார். அவர் முன்பு MI5இல் ஒரு பெரிய பதவியை வகித்தார். உள்நாட்டு உளவுத்துறை நிறுவனமான MI5 முன்பு ஸ்டெல்லா ரிமிங்டன் மற்றும் எலிசா மன்னிங்ஹாம்-புல்லர் ஆகிய இரண்டு பெண் தலைவர்களைக் கொண்டிருந்தாலும், மெட்ரெவேலி MI6ஐ வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார்.
MI6 தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, பிளேஸ் மெட்ரெவெலி, "இந்த சேவையை செய்வதற்காகா நான் பெருமைப்படுகிறேன். MI5 மற்றும் GCHQ உடன் இணைந்து, பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் UK நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 முக்கியப் பங்கு வகிக்கிறது. MI6இன் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இவர், கேம்பிரிட்ஜில் உள்ள பெம்பிரோக் கல்லூரியில் மானுடவியல் படித்தார். அவர் 1999ஆம் ஆண்டு ரகசிய புலனாய்வு சேவையில் (MI6) விசாரணை அதிகாரியாக சேர்ந்தார். இவர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் செயல்பாட்டுப் பணிகளில் கழித்துள்ளார். அவர், MI6யில் பல பதவிகளை வகித்துள்ளார். அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உள்நாட்டு உளவுத்துறை சேவையான MI5இல் இயக்குநர் நிலை பதவிகளையும் வகித்துள்ளார். பின்னர், MI6இல் தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான இயக்குநர் ஜெனரலானார். 2024ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வெளியுறவுக் கொள்கைக்கான அவரது சேவைகளுக்காக மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜார்ஜ் (CMG) ஆணைக்குழுவின் நண்பராக நியமிக்கப்பட்டார்.