பிரிட்டன் | கழிவறை செல்லும் மாணவர்கள் வேகமாக வகுப்பறை திரும்ப பள்ளி நிர்வாகம் போட்ட உத்தரவு!
கழிவறை செல்லும் மாணவர்களை வேகமாக வகுப்பறைக்குத் திரும்பி வரச் செய்ய பிரிட்டனில் ஒரு பள்ளி மேற்கொண்ட நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பிரிட்டனில் இருக்கிறது வில்லியம் பார் காம்ப்ரெகென்சிவ் பள்ளி. இந்தப் பள்ளி நிர்வாகம், கழிவறையில் உள்ள அனைத்துக் கண்ணாடிகளையும் நீக்கியுள்ளது. கழிவறை செல்லும் மாணவர்கள் அங்கே கண்ணாடி இருப்பதால் வேகமாக வகுப்பறைக்குத் திரும்புவதில்லை.
கண்ணாடிகளைப் பார்த்தபடி அங்கேயே நீண்ட நேரம் செலவிடுகின்றனர். வகுப்பு தொடங்கிய சிறிது நேரம் கழித்த பிறகுதான் வகுப்புக்கு வருகின்றனர். இதனால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம் நேர ஒழுங்கை கொண்டு வரவே கண்ணாடிகளை நீக்கி இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கண்ணாடி என்பது நம்முடைய அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் பொருள். அதற்கு தடை விதிப்பது என்பது மிகவும் அபத்தமானது என்று பெற்றோர்கள் விமர்சித்துள்ளனர். கடந்த ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பள்ளி, மாணவர்கள் கழிவறைக்கு சென்று கண்ணாடி பார்த்து டிக் டாக் செய்து நேரத்தை வீணடிப்பதாகக் கூறி கண்ணாடியை நீக்கியது குறிப்பிடத்தக்கது.