அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இருப்பினும், போர் தொடங்குவதற்கு முந்தைய சராசரி எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக கப்பல் போக்குவரத்து நடைபெறுவது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் பேரில் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கா, ஈரானால் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடங்கின. மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்த முற்றுகையை அமெரிக்கா தளர்த்தியது. இதையடுத்து அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதற்கிடையே, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், மோதல்கள் தொடர்வதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் விதிக்க திட்டமிட்டிருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேலின் அண்மைய தாக்குதல்களைக் காரணம் காட்டி ஜூன் 20 அன்று ஈரான் மீண்டும் இந்த நீரிணையை மூடுவதாக அறிவித்ததால், போக்குவரத்து மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. மேலும் நீரிணை நிர்வாகம் தொடர்பாக எந்தவொரு தெளிவான முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், தினசரி சுமார் 26-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த இந்த வழித்தடத்தில், தற்போது வெறும் 5 கப்பல்கள் மட்டுமே பயணிக்கும் அளவிற்குப் போக்குவரத்து முடங்கியுள்ளது. பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் காப்பீட்டுச் சிக்கல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றப்பட்ட 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதிகளில் நங்கூரமிட்டுக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கப்பல்களைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், காப்பீட்டுக் கட்டணத்தை தவிர்க்கவும், சில கப்பல் நிறுவனங்கள் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளன.
'மேர்ஸ்க்', MSC போன்ற உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்கள் தங்களின் சரக்குப் போக்குவரத்தை ஆப்பிரிக்காவின் தென்கோடிப் பகுதியான 'நன்னம்பிக்கை முனை' வழியாக மாற்றி அமைத்துள்ளன. இது 14 நாட்கள் கூடுதல் பயண நேரத்தையும், கூடுதல் செலவையும் ஏற்படுத்தினாலும் பாதுகாப்பானது என்பதால் ஹார்முஸ் வழித்தடம் தவிர்க்கப்படுகிறது. மறுபுறம், இந்தியக் கொடி ஏந்திய சில கப்பல்கள் மற்றும் சீனா, தென் கொரியா போன்ற நாடுகளின் ஒரு சில குறிப்பிட்ட கப்பல்கள் மட்டும் ஈரானின் தற்காலிக அனுமதியுடன் அல்லது சமிக்ஞைகளை அணைத்துவிட்டு ஓமன் நாட்டு எல்லைப் பகுதி வழியாக மிகவும் எச்சரிக்கையுடன் கடந்து வருகின்றன.