மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியுள்ளது.
இதையடுத்து, தற்போது தலைநகர் டமாஸ்கஸ்சில் அமைதி நிலவுகிறது. ஆட்சியிலிருந்து அசாத் தூக்கி எறியப்பட்டிருந்தாலும், இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கும் Mohammed Ghazi Jalali, அதிகார மாற்றம் இயல்பாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதிபர் பஷார் அசாத் தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், அசாத் ஆட்சியின்போது சிரியா சிறைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில், 'சைட்னயா சிறை- ஒரு மனித படுகொலைக் கூடம்' என்று விவரித்தது. அசாத் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மரண தண்டனைகளுக்கு ஒப்புதல் கொடுத்தனர் என்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் 2021 அறிக்கையின்படி, ‘சிரியா கைதிகளில் சைட்னாயா சிறையில் மட்டும் 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சைட்னாயா சிறைச்சாலையின் கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்கான அமைப்பு (ADMSP), “உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் சைட்னாயா சிறைச்சாலை ஒரு மரண கூடாரமாக மாறியது” என்று 2022ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. 2011 மற்றும் 2018க்கு இடையில் சித்திரவதை, மருத்துவ கவனிப்பு இல்லாமை அல்லது பட்டினியின் விளைவாக 30,000க்கும் அதிகமான கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்று அது மதிப்பிட்டுள்ளது. மேலும் விடுவிக்கப்பட்ட சில கைதிகளின் வாக்குமூலங்களை வைத்து 2018-2021 காலத்தில் 500 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் எனவும் அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் உரிய செயல்முறையைப் பின்பற்றியே, அனைத்து மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சைட்னாயா சிறைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவினர்களைத் தேடி வருகின்றனர். அந்த கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களைப் பார்க்க முடியாத வகையில், பல ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்தே அவர்களைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தனது சகோதரனைத் தேடும் 65 வயதான ஐடா தாஹா, "நான் அவனைத் தீவிரமாய் தேடுகிறேன். சிறையின் அடித்தளத்திலும் சில கைதிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அங்கு மூன்று அல்லது நான்கு தளங்கள் உள்ளன” என்கிறார், அவர். தாஹாவின் சகோதரர் கடந்த 2012ஆம் ஆண்டு சைட்னாயா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக 49 வயதான ரிம் ரமதான், “இது விவரிக்க முடியாதது. இந்த கனவு நிறைவேறும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. நாங்கள் மறுபிறவி எடுத்துள்ளோம். வீட்டில்கூட பல ஆண்டுகளாக பேசுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்கிறார்.
கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள், தற்போது தலைநகர் டமாஸ்கஸின் தெருக்களில் சுதந்திரமாகச் செல்ல முடிவதைப் பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகளையும் அந்த உடல்கள் காட்டிச் செல்கின்றன.
இதற்கிடையே, இந்தக் குற்றத்திற்கு தீங்கிழைத்த அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என கிளர்ச்சிப் படை தெரிவித்துள்ளது.