உலகம்

கோவிஷீல்டு கால இடைவெளியை நீட்டிப்பது நியாயமான அணுகுமுறை - வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர்

webteam

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணைகளுக்கிடையேயான கால இடைவெளியை நீட்டிக்க பரிந்துரைத்தது நியாயமான அணுகுமுறை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஆலோசகர் மருத்துவர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ இந்தியாவை போன்று நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பட்சத்தில் எப்படி அதிகமான மக்களை  தடுப்பூசி போட்டுக்கொள்ள வைப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். ஆதலால் இந்தியா கையில் எடுத்திருக்கும் இந்த முடிவு நியாயமான அணுகுமுறை.  நீங்கள் காலதாமதப்படுத்துகிறீர்கள் என்பது உண்மை. இந்த காலதாமதம் தடுப்பூசியின் செயல்திறனில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு” என்றார்.

முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முதல் மற்றும் இராண்டாவது காலதவணைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 6 -12 வாரங்களில் இருந்து 12- 16 வாரங்களாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பிரதானமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.