El nino reuters
உலகம்

எல் நினோவால் நடந்த நன்மை.. இனி நல்ல லாபம் தான்.. நடந்தது என்ன?

எல் நினோாவால் இந்த ஒரேயொரு நன்மை மட்டும் நடந்திருக்கிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அடையும் நிகழ்வு தான் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமான ஒரு காலநிலை நிகழ்வாக இருந்தாலும், இந்த ஆண்டு மிகவும் மோசமான அளவில் உயர்ந்துள்ளது. இதனால், உலக அளவில் வெப்பநிலை உயர்வு, தீவிர வானிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில பகுதிகளில் கடுமையான வறட்சி, பயிர்கள் கருகிப் போகும் அளவுக்கு நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள இந்த எல் நினோவால், சில பகுதிகளில் கனமழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படுகின்றன.

El nino

இவ்வாறு வறட்சி, வெள்ளம் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்கக் கூடிய இந்த எல் நினோவால், உலக அளவில் உள்ள பொதுமக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், ஒரேயொரு நன்மை மட்டும் இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த மாதம் கலிபோர்னியாவில் உள்ள கடல் பரப்பில் முதல்முறையாக லாங்ஃபின் பிகீ மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக கடல் ஆமைகளும் அங்கே முட்டையிட்டுள்ளன. விஷமுள்ள மஞ்சள் வயிற்று கடல் பாம்பு, திமிங்கலச் சுறாக்கள், சம்மட்டிச் சுறாக்களும் கடற்கரைக்கு அருகில் வந்துள்ளன.

எல் நினோ வெதுவெதுப்பான நீரை வடக்கே கொண்டு வருவதால், வெப்பமண்டல மீன்களும், விலங்குகளும் கலிபோர்னியா பக்கம் வருவதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி, டூனா வகை மீன்களும் இந்த கடற்பரப்பில் கிடைப்பதால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

இந்த ஒரேயொரு நன்மை மட்டுமே ஏற்படுத்தியுள்ள எல் நினோவால், குளிர்நீரில் வளரும் கெல்ப் எனப்படும் கடல் பாசிகள், அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. எல் நினோ அடுத்த ஆண்டு முடிவடைந்ததும் நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால், அதற்குள் இன்னும் பல விசித்திரமான உயிரினங்கள் கலிபோர்னியா கடற்கரைக்கு வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.