புதின், ஜெலன்ஸ்கி எக்ஸ் தளம்
உலகம்

உக்ரைனுக்கான அமெரிக்கா ராணுவ உதவி நிறுத்தம் எதிரொலி.. ஐரோப்பா கவலை!

அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தம் மற்றும் ரஷ்யாவால் ஐரோப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்

அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மோதல்களுக்குப் பிறகு, ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. அமெரிக்காவின் உதவியின்றி ரஷ்யாவை எதிர்த்து போராட முடியாது என்பதை ஐரோப்பா உணர்ந்துள்ளதாக அந்நாட்டு தலைவர்கள் கூறுகின்றனர். உக்ரைனுக்கு உதவ இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் எந்தவொரு சமாதான திட்டமும், அமெரிக்காவால் போதுமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படாமல் ஏற்றுக் கொள்ள முடியாததாக தெரிகிறது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்புத் தளங்களை அதிகப்படுத்திக் கொண்டிருந்தாலும்கூட, ரஷ்யாவை அதன் பாதையில் எதிர்ப்பதற்கு ராணுவத் திறன்கள் இல்லை என்றே கருதப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா

பல தசாப்தங்களாக அமெரிக்காவை அதிகமாக நம்பியிருப்பதால் வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான உளவுத்துறை கண்காணிப்பு, செயற்கைக்கோள் தொடர்புகள் போன்ற பல முனைகளில் அமெரிக்காவின் ராணுவ உதவியில்லாததால் ஐரோப்பா பலவீனமடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர் பாதுகாப்பு செலவுடன், ஐரோப்பாவில் 80,000க்கும் மேற்பட்ட போர் வீரர்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கனரக ஆயுதக் கப்பல்கள், கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் 100 அணுகுண்டுகள் என அமெரிக்காவின் உதவி அதிகம்.

அமெரிக்கா தனது வீரர்களை திரும்பப்பெற்றால் அதற்கு ஈடாக ஐரோப்பாவிற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் வீரர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் பெற்ற ராணுவ உதவியில் அமெரிக்கா வழங்கியது கிட்டத்தட்ட பாதியாக இருந்தது. இது, தற்போது நிறுத்தப்பட்டுள்ளதை ரஷ்யா வெளிப்படையாக வரவேற்றுள்ளது. தற்போது சாதகமாக கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ரஷ்யா முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று சீனாவும் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனா போன்ற அச்சுறுத்தல் நிலவும் சூழலில், இந்தியா இவை அனைத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று புவிசார் அரசியலை கவனித்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.