நடப்பாண்டு கோடை காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக 50 ஆயிரத்து 391 பேர் உயிரிழந்துள்ளதாகப் புதிய ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன. 30 நாடுகளைச் சேர்ந்த 854 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்த உயிரிழப்புகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 32 ஆயிரத்து 600 பேர் மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவால் உயிரிழந்துள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், 2022இல் பதிவான 29 ஆயிரத்து 480 உயிரிழப்புகள் மற்றும் 2003இல் பதிவான 28 ஆயிரத்து 462 உயிரிழப்புகளைவிட இது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜூன் 17 முதல் ஜூலை 1 வரையிலான இரு வாரங்களில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு வெப்ப அலை உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நாடுகள் வாரியாக, ஜெர்மனியில் 16 ஆயிரம் பேரும், ஃபிரான்ஸில் 14 ஆயிரத்து 458 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதியிலும் அதிகமானோர் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர்.
அதேவேளையில், தீவிர வெப்பத்தின் தாக்கம் காரணமாக 20 முதல் 44 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதைக் கொண்ட 800க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஐரோப்பாவைத் தவிர்த்து, வழக்கமாக மிதமான பருவநிலையைக் கொண்ட இங்கிலாந்து உள்ளிட்ட வட ஐரோப்பிய நாடுகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் கவனப்படுத்துகின்றனர்.