Ethiopia volcano erupt x page
உலகம்

எத்தியோப்பியா | 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை.. திருப்பி விடப்பட்ட இந்திய விமானம்!

எத்தியோப்பியாவில் கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்பு அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது.

Prakash J

எத்தியோப்பியாவில் கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, எத்தியோப்பியா. இங்குள்ள அலே மலைத்தொடரில், ’ஹேலி குப்பி’ என அழைக்கப்படும் எரிமலை அமைந்துள்ளது. எரித்திரியா எல்லைக்கு அருகில் அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 500 மைல் வடகிழக்கில் அமைந்துள்ள இந்த எரிமலை, கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளில் முதல்முறையாக நேற்று வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த எரிமலை வெடித்ததன் விளைவாக, வளிமண்டலத்தில் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு கலந்த புகை மூட்டம் பரவத் தொடங்கியது.

துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையத்தின் செயற்கைக்கோள் மதிப்பீடுகளின்படி, புகை மூட்டம் 10 கிமீ முதல் 15 கிமீ வரை உயர்ந்து, செங்கடலின் குறுக்கே கிழக்கு நோக்கி நகர்ந்தது. குறிப்பாக, எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் எல்லைப் பக்கம் நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவிய இந்த புகைமண்டலம் கிட்டத்தட்ட 20,000 அடி உயரத்தை எட்டியது. அதேநேரத்தில், ஓமன் நாட்டில் மாசுபடுத்தும் அளவுகளில் எந்த அதிகரிப்பும் பதிவு செய்யப்படவில்லை எனவும், எரிமலை உமிழ்வுகளால் காற்றின் தரம் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்பல் மூட்டம், வடஇந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அப்பகுதி வழியாகச் செல்லும் விமானப் பாதைகள் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் வழியாக விமான நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாக்கத்தை இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் கண்காணித்து வருகின்றன. சில விமானங்கள் ஏற்கனவே இதைத் தவிர்க்க பாதைகளைச் சரிசெய்து வருகின்றன. அந்த வகையில், இன்று கேரளாவின் கண்ணூரிலிருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது.

எத்தியோப்பியா

மறுபுறம் ஓமனின் சுற்றுச்சூழல் ஆணையம் எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆகாசா ஏர் நிறுவனம் தமது பயணிகளுக்கு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ’இதன் தாக்கம் வான்வெளியில் இருக்கும் என்று நம்புகிறோம். இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச விமான ஆலோசனைகள், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்’ என அது தெரிவித்துள்ளது.