தொழில், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்வதுண்டு. தனக்கான வளர்ச்சியை கட்டமைக்கும் இந்தியர்கள், தான் செல்லும் நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. அப்படி, செல்லும் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவம் அதிகப்படியாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அதுபோன்றதொரு இனவெறித்தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று இங்கிலாந்தில் உள்ள வால்வர்ஹாம்டனில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இரண்டு இந்திய சீக்கிய ஆண்களை மூன்று இளைஞர்கள் தாக்கிய வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இங்கிலாந்தின் வால்வர்ஹாம்டனில் வயதான இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த தாக்குதலில் சீக்கியர்களின் தலைப்பாகை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கிறது. இந்த இனவெறித் தாக்குதல் எப்போதும் சர்பத் தா பாலாவை (அனைவரின் நல்வாழ்வை) நாடும் சீக்கியர்களின் மீது நடத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்து அரசிடம் முறையிட்டு, அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் இங்கிலாந்து போக்குவரத்து காவல்துறை கூறியதாவது, இது மாதிரியான நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பத்தப்பட்ட நபர்கள் இந்த வழக்கில் புகாரளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என்று தெரிவித்துள்ளது.
வால்வர்ஹாம்டன் வடகிழக்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரீனா பிராக்கன்ரிட்ஜ் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது, வால்வர்ஹாம்டன் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நகரம் இங்கு இந்த மாதிரியான தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில் வாழும் அனைவரும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை காவல்துறையின் உடனடி கைது காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து வெளிநாடுகளில் இந்தியர்கள் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கின்றன.