சீன அரசில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி தளர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கட்சி, பொருளாதார, ராணுவ விவகாரங்களில் அதிபரின் பிடி தளர்ந்துள்ள நிலையில் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஜாங் யுக்சியாவிடம்தான் உண்மையான அதிகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஷி கடந்த மே 21ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை வெளியே வராததும் இதன் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஷிக்கு நெருக்கமான ராணுவ ஜெனரல்களில் சிலர் நீக்கப்பட்டுவிட்டனர் என்றும் சிலர் அதிகாரம் குறைந்த பதவிக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
சீனாவை பொறுத்தவரை ஆட்சித் தலைமை மாற்றம் படிப்படியாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அதே பாணியே தற்போதும் கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சீர்திருத்தங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவரும் தொழில்நுட்ப ஆர்வலருமான வாங் யாங்-கை அடுத்த அதிபராக்க சீன கம்யூனிஸ்ட் காய் நகர்த்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. 72 வயதான ஷி ஜின்பிங் கடந்த 13 ஆண்டுகளாக சீன அதிபராகவும் ராணுவத்தின் தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.