elon musk x page
உலகம்

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம்.. இந்தியாவில் சேவை தொடங்க அனுமதி!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து பெற்றுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

Prakash J

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் உலகில் பல நாடுகளுக்கு இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக, இந்தியாவிலும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

elon musk

இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து பெற்றுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தின. இது இந்தியாவில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுக்குப் பிறகு, இச்சேவையை வழங்க தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும். சேவைகளைத் தொடங்குவதற்கு முன் சட்டப்பூர்வ இடைமறிப்புக்கு ஒத்துழைப்பது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஸ்டார்லிங்க் இணங்க வேண்டும். அடுத்ததாக, ஸ்டார்லிங்க் இந்தியாவில் பரிசோதனை முறையில் சேவை வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்காலிகமாக15 முதல் 20 நாள்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்தியாவில் வணிகரீதியான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகள் முழுமையாகத் தொடங்குவதற்கு இன்னு சில மாதங்கள் ஆகலாம்.