உலக பணக்காரரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் மட்டும் 700 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரான எலான் மஸ்க், தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். இந்த நிலையில், ஒரே வாரத்தில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த டிசம்பர் 2ஆவது வாரத்தில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரைக் கடந்த நிலையில், வழக்கு ஒன்றில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்தது. மேலும், டெஸ்லாவின் பங்கு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதையடுத்து, அவருடைய நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் விரைவில் உலகின் முதல் ட்ரில்லியன் செல்வந்தராக அவர் மாறுவார் எனக் கருதப்படுகிறது.
தவிர, வரலாற்றில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்து இருக்கிறார். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, அவரது நெருங்கிய போட்டியாளரான கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜைவிட மிக அதிகமாக உள்ளது. ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, கிட்டத்தட்ட $500 பில்லியன் அதிகமாக உள்ளது. உலகின் இரண்டாவது பணக்காரரான லாரி பேஜின் சொத்து மதிப்பு 252.6 பில்லியன் டாலராக உள்ளது.