எலான் மஸ்க் எக்ஸ் தளம்
உலகம்

மஸ்க்குக்கு 1 லட்சம் கோடி டாலர் ஊதியத் தொகுப்பு! எந்த ஒரு சிஇஓக்கும் கிடைக்காத தொகை

எலான் மஸ்க்குக்கு 1 லட்சம் கோடி டாலர் ஊதியத் தொகுப்பு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் கோடி வழங்க டெஸ்லா நிறுவனத்தின் 75 சதவீத பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பது உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Angeshwar G

எலான் மஸ்க்குக்கு டெஸ்லா நிறுவனம் 1 லட்சம் கோடி டாலர் ஊதியத்தை ஒப்புதல் அளித்துள்ளது. இது உலக வரலாற்றில் எந்த தலைமைச் செயல் அதிகாரிக்கும் கிடைக்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும். மஸ்க் நினைத்தால், இந்த தொகையில் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வழங்க முடியும்.

எலான் மஸ்க்குக்கு 1 லட்சம் கோடி டாலர் ஊதியத் தொகுப்பு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் கோடி வழங்க டெஸ்லா நிறுவனத்தின் 75 சதவீத பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பது உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஏனென்றால், உலக வரலாற்றில் இதுவரையில் எந்த தலைமைச் செயல் அதிகாரிக்கும் கிடைத்திராத ஊதியம் என்பதல்ல, யாரும் கற்பனை கூட செய்துபாத்திராத தொகை இது.

எலான் மஸ்க்

ஆப்பிள் சிஇஓ டிம் குக்குக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஊதியத் தொகுப்பைவிட இது 13 ஆயிரத்து 400 மடங்கு அதிகம். ஆல்ஃபபெட் சிஇஓ சுந்தர்பிச்சைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஊதியத் தொகுப்பைவிட 4 ஆயிரத்து 500 மடங்கு அதிகம்.

எலான் மஸ்க்குக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் ஊதியத் தொகுப்பு என்பது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியைவிட அதிகம். இன்னும் சொல்லப்போனால் 180 நாடுகளின் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமாகும். ஐ. நா. மதிப்பீட்டின்படி, 2030-க்குள் உலகப் பசியை ஒழிக்கத் தேவைப்படும் மொத்தத் தொகையை விடவும் இது இரண்டு மடங்குக்கும் மேல் அதிகம்.

மஸ்க் நினைத்தால், தனது இந்தத் தொகையில், பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 கொடுக்க முடியும். இந்தியாவில் இருக்கும் முழு மக்கள்தொகைக்கும் $1 டிரில்லியன் பணத்தை விநியோகித்தால் ஒவ்வொரு நபருக்கும் சுமார் ரூ.57,000 கிடைக்கும். அந்த அளவுக்கு மிகப்பெரிய தொகை இது.

தற்போது மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உள்ளது. தற்போது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஊதிய தொகுப்பு அவரது மொத்த சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகம். நிர்ணயிக்கப்பட்டிருக்கும் டெஸ்லா இலக்குகளை எலான் மஸ்க் எட்டினால், அவருக்கு இந்த ஊதியத் தொகுப்பு முழுமையாக கிடைக்கும்.