PT World Digest | உலகை மிரட்டும் ட்ரம்ப் முதல் உக்ரைன் நாணயத்தின் பெயர் மாற்றம் வரை!
இன்றைய PT World Digest பகுதியில் உலகை மிரட்டும் ட்ரம்ப் முதல் உக்ரைன் நாணயத்தின் பெயர் மாற்றம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
1. உலகை மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து, 150 முறை உலகத்தை அழிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடம் போதுமான அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதனால், அனைத்து நாடுகள் அணு ஆயுத ஒழிப்பிற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்ஆகியோர் அணு ஆயுத தயாரிப்புக்கு நிதி ஒதுக்குவதை தவிர்த்துவிட்டு, வேறுதிட்டங்களுக்கு நிதி ஒதுக்கலாம் என்றும் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
2. இந்தோனேசியாவில் மசூதியில் குண்டுவெடிப்பு
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஜும்மா தொழுகையின்போது நிகழ்ந்த இந்தக் குண்டுவெடிப்பில் 20 மாணவர்கள் உட்பட 54 பேர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் பள்ளி மாணவர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் சில பொம்மை துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால் மசூதியில் ஏராமளானோர் கூடியிருந்த நிலையில், குண்டுவெடிப்பு நடந்திருப்பது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. சூடான் போராளிக் குழுவால் கடத்தப்பட்ட இந்தியர்
சூடானில் இந்தியர் ஒருவரை ஆயுதம் தாங்கிய போராளிக் குழு சிறை பிடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டில் ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) என்ற அரசுக்கு எதிரான போராளிக் குழு செயல்பட்டு வருகிறது. இந்த போராளிக் குழு சமீபத்தில் சூடானின் எல் ஃபாஷர் (ElFasher) நகரை ஆக்கிரமித்தது.
அப்போது, அங்கு தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஆதர்ஷ் பெஹெரா என்ற இந்திய இளைஞர், போராளிக் குழுவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அவரை மீட்கும் நடவடிக்கையில், சூடான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
4. ஜெர்மனி: 10 நோயாளிகளைக் கொன்ற செவிலியருக்கு ஆயுள் தண்டனை
ஜெர்மனியின் வூர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில், 10 நோயாளிகளைக் கொன்ற வழக்கில் ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் 27 பேரைக் கொல்ல முயற்சி செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது.
இரவில் தான் செய்ய வேண்டிய வேலையின் சுமையைக் குறைப்பதற்காக, பெரும்பாலும் முதிய நோயாளிகளுக்கு மயக்க மருந்துகளையும் வலி நிவாரணிகளையும் செலுத்தி அவர்களைக் கொன்றார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தக் குற்றங்கள் டிசம்பர் 2023 முதல் மே 2024க்குள் நடந்துள்ளன.
5. ஒரு மாதமாக முடங்கி இருக்கும் அமெரிக்க அரசு
அமெரிக்காவில் ஒரு மாதத்துக்கும் மேலாக அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு காலம் அரசு முடக்கத்தில் இருப்பது இதுவே முதன்முறை. அரசு முடக்கத்தால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 14 லட்சம் அரசு ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
பல லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த முடக்கத்தால் வாரத்துக்கு 15 பில்லியன் டாலர் அமெரிக்க பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுகிறது. ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தடைபட்டுள்ளது.
6. எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ வைரல்!
தொழிலதிபர் எலான் மஸ்க் தனது GROKIMAGINE பக்கத்தில் உருவாக்கிய புதிய வீடியோ காட்சி உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அதில் ஒரு சிங்கம் தன்னுடன் நண்பர்களான வரிக்குதிரை மற்றும் ஒட்டகச்சிவிங்கியுடன் நின்று புகைப்படம் எடுக்கின்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இக்காட்சியை, விலங்குகளும் நண்பர்களாக ஒன்றிணையும் உலகம் என்ற செய்தியுடன் எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோஉலகளாவிய சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
7. உக்ரைன் நாணயத்தின் பெயர் மாற்றம்
உக்ரைன் தன் நாட்டு நாணயத்தில் பயன்படுத்தப்படும், ரஷ்யாவின் அடையாளமான கோபெக் எனும் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக உக்ரேனிய வரலாற்றுப்பூர்வ பெயரான ஷா என்பதை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
ஷா என்பது கடந்த 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் உக்ரைனின் ஒரு நாணய அலகாக இருந்தது. ஒரு கோபெக் நாணய மதிப்பே ஒரு ஷா நாணயத்தின் மதிப்பாக இருக்கும் என அந்நாட்டு தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
8. ஏமனில் பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவிலிருந்து அல்-அர்குப் மலைப் பகுதி வழியாக வந்துகொண்டிருந்த பயணிகள் பேருந்து, எதிர்பாராத விதமாக முன்னே சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியது.
இதனால் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த 35 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
9. மருத்துவம் படிக்க ரஷ்யா சென்ற இந்திய மாணவர் மர்ம மரணம்
டாக்டர் கனவோடு ரஷ்யாவுக்கு எம்பிபிஎஸ் படிக்கச் சென்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த அஜித்குமார் சௌத்ரி என்ற மாணவர் மருத்துவம் படிப்பதற்காக 2023ஆம் ஆண்டு ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த அஜித்குமார் அக்டோபர்19ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.
இந்நிலையில், 19 நாட்கள் கழித்து, பல்கலைக்கழத்துக்கு அருகில் உள்ள வெள்ளை நதி அணையில் அஜித்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரதுஉடலை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
10. பிரமாண்ட சிலந்தி வலை; ஆராய்ச்சியாளர்கள் பிரமிப்பு
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிலந்திகள் கட்டிய பிரமாண்ட சிலந்தி வலை அமைந்துள்ள குகையை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ் - அல்பானியா நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சல்ஃபர் (SULFUR CAVE) குகைதான் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிலந்திகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது.
’அட்வென்சர்’ திரைப்படம் போல, மார்பளவு தண்ணீருக்கு மத்தியில் இந்த குகைக்குள் பயணம் செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு லட்சம் சிலந்திகள் ஒரே இடத்தில் கட்டிய பிரமாண்ட சிலந்தி வலையை தொட்டுப் பார்த்து பிரமித்தனர்.

