எலான் மஸ்க், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | அரசுத் துறையிலிருந்து விலகும் எலான் மஸ்க்? ட்ரம்ப் சொன்ன உருக்கமான வார்த்தைகள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துறையில் பணியாற்றிவரும் எலான் மஸ்க், அந்த பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

Prakash J

அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டிற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

எலான் மஸ்க், ட்ரம்ப்

இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அரசுப் பணிக்கு ஒதுக்கப்படும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, தனது டெஸ்லா கார் நிறுவன பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்துள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், எலான் மஸ்க்கை சிலர் மோசமாக நடத்தியதாகவும், சிறந்த தேசப்பற்றாளரான அவரை தன்னுடன் நீண்டகாலம் வைத்துக்கொள்ளவே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.