இரண்டாவது முறையாக மீண்டும் அதிபர் ஆன ட்ரம்ப்புக்கு வலது கரமாக இருந்த எலான் மஸ்க், தனிக்கட்சியை தொடங்கி அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளார். ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதே அமெரிக்க மக்களுக்கு நல்லது என்று ஊரெல்லாம் பரப்புரை செய்த எலான் மஸ்க், இன்று ட்ரம்புக்கு எதிராகவே புது கட்சியை நிறுவியுள்ளார். என்ன நடக்கிறது? இதற்கான பின்னணி என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், ட்ரம்ப்பை மையப்படுத்தி பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பு வரை கமலா ஹாரிஸ் பக்கமே கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதமாக வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் ட்ரம்புக்கு சாதகமாக அமைந்தது. இந்த தேர்தல் வெற்றியில், பல பேர் ட்ரம்ப்புக்கு உதவினாலும், அதில் எலான் மஸ்க்தான் முக்கியமானவர். உலகப்பணக்காரர்களில் ஒருவராக திகழும் மஸ்க், டொனால்ட் ட்ரம்புக்காக பெரிய அளவில் பரப்புரை செய்தார். ஆன்லைனிலும் சரி.. ஆஃப் லைனிலும் சரி, பெரு முயற்சி எடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான், வெற்றிபெற்ற கையோடு மஸ்க்கை தனக்கு நெருக்கமாகவே வைத்துக்கொண்டார் ட்ரம்ப். ஆம், அமெரிக்க நிர்வாகத்தில் செலவுகளை குறைக்க தனி துறையை உருவாக்கி அதற்கு அதிகாரியாக மஸ்க்கை நியமித்தார். அதன்படி, செயல்துறை மேம்பாட்டுத் துறை எனப்படும் DOGE-ன் தலைவராக நியமிக்கப்பட்டார் எலான் மஸ்க்.
அரசின் செலவுகளை குறைப்பது.. நிறுவனங்களில் சீரமைப்புகளை கொண்டு வருவது உள்ளிட்ட பணிகள் ஒப்படைக்கப்பட்டது. அதில் அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், ட்ரம்ப்போடு மோதல் போக்கு நிலவியது. குறிப்பாக, one big beautiful bill என்ற வரி மற்றும் செலவு குறைப்பு மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட பிறகு அதனை நேரடியாக விமர்சித்திருந்தார் மஸ்க்.
இப்படியாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான மோதலைத் தொடர்ந்து, அமெரிக்க கட்சி என்ற பெயரில் புது கட்சியை தொடங்கியுள்ளார் மஸ்க். மேலும், வீண் விரயம் மற்றும் ஊழலால் நாடு திவாலாகும்போது, ஒருகட்சி முறையில் வாழ்வது ஜனநாயகம் அல்ல என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டவர், மக்களுக்கு சுதந்திரத்தை திருப்பி அளிப்பதற்காகவே தனது கட்சியை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கட்சி துவங்கலாமா என்று கடந்த 4ம் தேதி எக்ஸ் தளத்தில் அவர் நடத்திய வாக்கெடுப்பிற்கு, 65 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மாற்றத்தையும், அமெரிக்காவுக்கு உரிய பாதுகாப்பையும் ட்ரம்ப்பின் நிர்வாகத்தாலேயே வழங்க முடியும் என்று பரப்புரை செய்து வந்த மஸ்க், இன்று அவருக்கு நேதிர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இருபெரும் கட்சிகளைத் தாண்டி, அவரது கட்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.