அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டிற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. அடுத்து, செனட் சபையில் நிறைவேற இருக்கிறது. இந்த மசோதா பல்வேறு பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017இல் டிரம்ப் கொண்டு வந்த வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது ஆகியவை முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும் இதில் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் அதிபர் ட்ரம்ப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த மசோதாவை தனது பொருளாதாரத் திட்டத்தின் முக்கியப் பகுதியாக கருதுகிறார். இருப்பினும், நிதி ஆலோசகர்கள், வல்லுநர்கள் பலரும் இந்த மசோதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே, மசோதாவில் ட்ரில்லியன் டாலர் வரிச்சலுகை என்பது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று எலான் மஸ்க் மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்குத் தலைவராகப் பதவி வகிக்கத் திட்டமிடப்பட்ட நேரம் நிறைவடைந்துவிட்டது எனக் கூறி எலான் மஸ்க் அதிலிருந்து விலகினார். எனினும், பிக் பியூட்டிஃபுல் மசோதா குறித்து சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அவர், ”என்னை மன்னிக்கவும் ஆனால் என்னால் இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த மிகப்பெரிய செலவு மசோதா ஓர் அருவருப்பானது. இதற்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் என்ன தவறு செய்துள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். இந்தச் செலவு மசோதா அமெரிக்க வரலாற்றில் கடன் உச்சவரம்பில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கொண்டுள்ளது! இது கடன் அடிமைத்தன மசோதா. அமெரிக்காவைத் திவாலாக்குவது சரியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் இந்த கருத்து தொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், "இந்த மசோதாவில் எலோன் மஸ்க் எந்த நிலையில் இருந்தார் என்பது அதிபருக்கு ஏற்கெனவே தெரியும். இது அதிபரின் கருத்தை மாற்றாது. இது ஒரு பெரிய அழகான மசோதா, அவர் அதில் உறுதியாக இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.