Electric car  web
உலகம்

ஈரான் போர்| ஹார்முஸ் எண்ணெய் நெருக்கடி.. அதிகரிக்கும் மின்சாரக் கார் விற்பனை?

ஹார்முஸ் எண்ணெய் நெருக்கடி காரணமாக 2035க்குள் உலக கார் சந்தையின் 30%த்தை மின்சார வாகனங்கள் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

PT WEB

உலகளாவிய கச்சா எண்ணெய் நெருக்கடி காரணமாக , மின்சாரக் கார்களின் தேவை வேகமாக உயரும் என IEA கணிக்கிறது. 2035க்குள் மின்சார வாகனங்கள் 51 கோடியாக உயர்ந்து, உலக கார் சந்தையில் 30% பங்கையும், ஆண்டு விற்பனை 2.3 கோடியையும் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது.

செய்தியாளர் - எம்.மீரா

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், வளைகுடா முழுவதும் மறைமுக மோதல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.

electric vehicle

இவ்வாறு எண்ணெய் விநியோகத்தில் நிச்சயமற்ற நிலை இருப்பதால் மின்சாரக் கார்களுக்கான தேவை அதிகமாகும் என சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது வருடாந்திர உலகளாவிய மின்வாகனங்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளாவிய கார் சந்தையில் மின்சாரக் கார்கள் 30 சதவீத இடத்தைப் பிடிக்கும் என்றும், அவற்றின் ஆண்டு விற்பனை 2.30 கோடியைத் தாண்டும் என்றும் அந்த முகமை கணித்துள்ளது.

மேலும் உலகளவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை (இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் நீங்கலாக) இன்றுள்ள சுமார் 8 கோடி அளவிலிருந்து, 2035-ஆம் ஆண்டிற்குள் 51 கோடி அளவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக நெருக்கடி நிலவும் இக்காலகட்டத்தில் மின்சார வாகனங்கள் ஒரு நிவாரணத்தையும் அளித்து வருகிறது என்று IEA-வின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

electric car

கடந்த ஆண்டில், உலகளாவிய மின்வாகனச் சந்தை 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது; இதன் மூலம் விற்பனை எண்ணிக்கை 2 கோடி கார்களை எட்டியுள்ளது. அதாவது, உலகளவில் விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு நான்கு கார்களிலும் ஒன்று மின்சாரக் காராக இருந்துள்ளது.

ஏறக்குறைய 40 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட புதிய கார்களில் 10 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமானவை மின்சாரக் கார்களாகவே இருந்துள்ளன.

electric vehicle

மின்சார வாகன உற்பத்தியைப் பொறுத்தவரை, உலகளாவிய மின்சாரக் கார் விற்பனையில் சீன வாகன உற்பத்தியாளர்கள் 60 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது; அதேவேளையில், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க உற்பத்தியாளர்கள் உலகளாவிய விற்பனையில் சுமார் 15 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது.