சிங்கப்பூரில் 6 மாதம் சிறை.. உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த Byju.. வீழ்ந்தது எப்படி?
2011இல் பெங்களூருவில் தொடங்கிய பைஜூஸ், கொரோனா ஊரடங்கின்போது ஆன்லைன் கல்விப் புரட்சியால் மதிப்பீட்டை 5 பில்லியனிலிருந்து 22 பில்லியனாக உயர்த்தியது. ஆனால் பள்ளிகள் மீண்டும் திறந்ததால் தேவை குறைந்து, வருவாய் சரிந்து, 8,245 கோடி ரூபாய் நஷ்டம், கடன் சுமை, திவால் நிலை என வீழ்ச்சி தொடங்கியது. இதன் பின்னணியில் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் மீது பல வழக்குகள் எழுந்தன.
- எம்.மீரா
2011ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் பிரபல கல்வி நிறுவனமான பைஜு (BYJU'S), போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமாக தனது பயணத்தினை தொடங்கியது. இது பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களை ஆன்லைனில் கற்பித்து வந்தது.
கொரோனா ஊரடங்கின்போது புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவின் பிரபல இணையவழி கல்வி நிறுவனமாக அறியப்பட்டது. அதாவது, 2020ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணையவழி வகுப்புக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.
இதனால் பைஜு நிறுவனமும் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. பைஜுவின் மதிப்பீடு, கொரேனா தொற்றுக்கு முன் $5 பில்லியனில் இருந்து 2022 இல் $22 பில்லியனாக உயர்ந்தது, மேலும் அது பல நிறுவனங்களை கையகப்படுத்தியது. ஆனாலும் அதே ஆண்டு முதல் அந்த நிறுவனம் வீழ்ச்சியையும் சந்திக்க ஆரம்பித்தது. வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டதால், இணையவழி கற்றலுக்கான தேவை குறைந்தது. பைஜு நிறுவனத்தின் வருவாயும் குறைந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஆண்டு பைஜு நிறுவனம் ரூ.8,245 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது.
இதனால் லாபத்தைவிட செலவுகள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து ஒரு கட்டத்தில் பைஜூ நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், கத்தார் முதலீட்டு வாரியத்தின் (Qatar Investment Authority) துணை நிறுவனமான 'கத்தார் ஹோல்டிங்ஸ்' தொடர்ந்த வழக்கு ஒன்றில், ஏப்ரல் 2024 முதல் பைஜூ ரவீந்திரனின் சொத்து விவரங்களை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுகளை மீறியதற்காக, அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்குச் செலவாக இந்திய மதிப்பில் சுமார் 67 லட்சம் ரூபாய் செலுத்தவும் உடனடியாக சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரவீந்திரன் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு நாட்டில் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த உத்தரவில் ‘Beeaar Investco Pte’ எனும் நிறுவனத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பான வழக்குகள், அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதற்காக, அமெரிக்க நீதிமன்றங்கள் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தன.

