அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் எல் சால்வடார் நாட்டு குடிமக்களைத் திரும்பப் பெறுவதுடன், நாடு கடத்தப்படும் பிற நாட்டினரையும் ஏற்றுக்கொள்ள எல் சால்வடார் அரசு ஒத்துழைக்கும் என உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க கைதிகளை குறைந்த கட்டணத்திற்கு தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் அடைத்துக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் செயலாளர் மார்க்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக லத்தீன் அமெரிக்காவிலுள்ள எல் சால்வடார் நாட்டிற்குச் சென்றார். அப்போது அந்நாட்டு அதிபர் நயீப் புகேலேவைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது அமெரிக்காவின் முக்கியமான மற்றும் பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தங்களது நாட்டுச் சிறைச்சாலைகளில் மிகவும் குறைந்த கட்டணத்தில் அடைத்துக்கொள்ளும் திட்டத்தை அதிபர் புகேலே தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கர்கள், குடியேறிகள், லத்தீன் அமெரிக்க குழுக்களான எம்.எஸ்.13 மற்றும் டிரென் டே அரகுவா ஆகிய குழுக்களைச் சேர்ந்த நபர்கள் என அனைத்து தரப்பு குற்றவாளிகளையும் தங்களது நாட்டு சிறைகளில் அடைத்துக்கொள்வதற்கு எல் சால்வடார் முன்வந்துள்ளது. மேலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் எல் சால்வடார் நாட்டு குடிமக்களை திரும்பப் பெறுவதுடன் நாடு கடத்தப்படும் பிற நாட்டினரையும் ஏற்றுக்கொள்ள எல் சால்வடார் அரசு ஒத்துழைக்கும் என உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்பு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 30,000 பேரை கியூபா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான குவாந்தனமோ பே சிறைச்சாலையில் அடைக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், எல் சால்வடார் இத்தகைய திட்டத்தை முன்வைத்ததற்கும், தங்கள் நாட்டு குடியேறிகளை திரும்ப பெற ஒத்துழைப்பதற்கும் எல் சால்வடாருக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க செயலாளர் மார்க்கோ ரூபியோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் புகேலே, ’தங்களது பிரம்மாண்ட சிறைச்சாலையில் குறைந்த கட்டணத்தில் அமெரிக்க குற்றவாளிகளை அடைக்கும் திட்டத்தை அமெரிக்க அரசிடம் வழங்கியுள்ளதாகவும், இந்த தொகை அமெரிக்காவிற்கு மிகவும் சிறிய தொகை என்றாலும் எல் சால்வடாருக்கு மிகவும் முக்கியமானது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல் சால்வடாரின் மிகப்பெரிய சிறைச்சாலை என அழைக்கப்படும் CECOT, கடந்த 2023ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதிகபட்சமாக இந்தச் சிறையில் 40,000 கைதிகளை அடைத்து வைக்க முடியும். இதன் அறைகள் ஒவ்வொன்றும் 65 முதல் 70 கைதிகளை வைத்திருக்கின்றன. இந்த அறைகளில் ஒருவருக்கொருவர் மேல் ஒன்றாக உட்கார வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அனைவருக்கும் போதுமான படுக்கைகள் இல்லாத அறைகளில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள்.
மேலும், இந்த கைதிகள் தங்கள் தண்டனைக்குப் பிறகு சமூகத்திற்குத் திரும்புவதற்குத் தயாராகும் விதிகள் எதுவும் இல்லை. பயிற்சி வகுப்புகள், கல்வித் திட்டங்களும் இல்லை. ஏனெனில் அவர்கள் ஒருபோதும் வெளியே அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு அந்நாட்டின் 81வது அதிபராக பதவியேற்று கொண்ட புகேலே, அங்கு பெருகியிருந்த குற்றவாளிக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி சிறையில் அடைத்தார். அவரது ஆட்சி உருவான பின்னர் அந்நாட்டில் குற்றஞ்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.