ecuador flood Reuters
உலகம்

எல் நினோவின் கோரத்தாண்டவம்.. ஈக்வடாரை மூழ்கடித்த பெருவெள்ளம்.. ஒரே மழையால் உருக்குலைந்த நாடு!

எல் நினோவின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

எல் நினோவின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி எங்கு இந்தப் பாதிப்பு நிகழ்ந்துள்ளது? எல் நினோவால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்..

ecuador flood

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிகழ்வையே எல் நினோ (El Niño) என்கிறோம். இந்தக் காலநிலை நிகழ்வு உலகின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக, தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையை ஒட்டியுள்ள ஈக்வடார் மற்றும் பெரு போன்ற நாடுகளில் வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், தற்போது எல் நினோவின் தாக்கத்தால் ஈக்வடாரில் ஆகஸ்ட் மாத இறுதி முதல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டில் தேசிய அளவில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈக்வடாரின் தேசிய இடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை அந்நாட்டின் 24 மாகாணங்களில் மொத்தம் 2,249 பேரிடர் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தச் சம்பவங்களால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,23,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளப்பெருக்கு மட்டும் சுமார் 60 சதவீத பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஈக்வடாரின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் இரண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்த நிலையில், அங்கிருந்த மக்களைப் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

ecuador flood

மேலும், ஈக்வடாரைத் தொடர்ந்து அண்டை நாடான பெருவிலும் எல் நினோவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, பெருவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பியூரா நகரில் ஒரே நாளில் 143 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, எல் நினோவின் தாக்கத்தால் தென் அமெரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஈக்வடாரில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.