ம*ண தண்டனையை தவிர வேறு வழியில்லை? நாடு திரும்பும் முயற்சியில் ஷேக் ஹசீனா.. வங்கதேச அரசு விளக்கம்!!
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகப் புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை கோரி வங்கதேச அரசிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம்.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், வங்கதேசம் நான் திரும்பினால் கொல்லப்படலாம். ஆனாலும், நான் டிசம்பரில் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தச்சூழலில் தான், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை கோரி கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 9) விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தப்பியோடிய குற்றவாளி என்றும், பயங்கரவாதிகளுக்கும் தப்பியோடியவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்க வங்கதேச சட்டத்தில் இடமில்லை என்றும் அவரது கோரிக்கையை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், ஷேக் ஹசீனாவின் நாடு திரும்பு கோரிக்கை வெறும் நாடகம் என்றும் விமர்சித்திருக்கிறது. அதேசமயம், ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து வங்கதேசம் திரும்ப வேண்டுமென்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஷேக் ஹசீனா உண்மையிலேயே வங்கதேசத்திற்குத் திரும்ப விரும்பியிருந்தால், விசாரணை நடைபெற்றபோதே நாடு திரும்பி வழக்கை எதிர்கொண்டிருக்க வேண்டும் எனவும் மரண தண்டனைத் தீர்ப்பு வெளியான 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் எனவும் வங்கதேச அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் முகமது அமினுல் இஸ்லாம் (Md Aminul Islam) தெளிவுபடுத்தியிருக்கிறார். அதேபோல, அவர் நாடு திரும்பினால் கட்டாயம் மரண தண்டனையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அமினுல் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் நிராகரிப்பையடுத்து அவரது ஆதரவாளர்கள் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகள் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் சிக்கி ஒருவரு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

