எல் நினோவால் பாதிக்கப்படக்கூடிய 45 உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் மக்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்து, 27 கோடியே 40 லட்சமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு, தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இந்த எல் நினோ, தீவிர வறட்சி மற்றும் கனமழையைத் தூண்டுகிறது. இந்தக் காலநிலை மாற்றம் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையே உச்சத்தை எட்டும் என்றும், இதன் விளைவாக வேளாண் அறுவடை பாதிக்கப்பட்டு 2027 வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆபத்தைக் குறைப்பதற்காக, தெற்கு சூடான், சாட், குவாதமாலா உள்ளிட்ட 6 நாடுகளில் கடந்த மே மாதம் முதல் 1 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான முன்-பேரிடர் உதவிகள் மூலம் 5 லட்சம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன், எல் நினோ பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதுகாக்க உலக நாடுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என உலக உணவுத் திட்டமும் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.