DR Congo Ebola virus reuters
உலகம்

காங்கோவில் மிகவும் ஆபத்தான வைரஸ்.. தொடரும் உயிரிழப்புகள்.. அவசரநிலை அறிவித்த ஐ.நா.!

இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Prakash J

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு இதனைச் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு வைரஸ் மக்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் இந்த எபோலா பரவல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள், ஜூன் மாத நிலவரப்படி காங்கோ மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவையும் சேர்த்து 900-க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோவின் வடகிழக்கு மாகாணமான இத்தூரிதான் இந்த நோய்ப் பரவலின் மையப்பகுதியாக உள்ளது. இது தவிர வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களுக்கும் நோய் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Congo Ebola virus

இந்த முறை காங்கோவில் பரவிவரும் எபோலா வைரஸ் வகை மிகவும் ஆபத்தானது. இதற்கு முன்னதாகப் பரவிய 'ஜைர்' எபோலா வகைக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போது பரவுவது பண்டிபுகியோ என்ற அரிதான எபோலா வைரஸ் வகையாகும். இந்த பண்டிபுகியோ எபோலா வைரஸ் வகைக்கு தற்சமயம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ கிடையாது. மேலும், இந்த குறிப்பிட்ட வைரஸ் வகை அரிதானது என்பதால், இதைக் கண்டறியும் பிரத்யேக டெஸ்டிங் வசதிகள் போதுமான அளவில் இல்லை. தவிர, காங்கோவின் வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் உள்நாட்டுப் போர் மற்றும் ஆயுதக்குழுக்களின் மோதல்கள் காரணமாக மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Congo Ebola virus

இதனால் நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதும் கடினமாக உள்ளது. இதுவே தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. காங்கோவில், நிலைமை மோசமடைந்து வருவதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆப்பிரிக்கா சிடிசி ஆகியவை இணைந்து அவசரகாலத் தடுப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளன. எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எபோலாவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி ஆகியன காணப்படுகிறது. அது, சாதாரணக் காய்ச்சலான மலேரியாவைப் போலவே இருப்பதால், மக்கள் இதனை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இது தீவிரமடையும்போதுதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.