ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் எபோலா வைரஸ்.. இந்திய சுகாதாரத் துறையின் நடவடிக்கை என்ன?
ஆப்பிரிக்கா நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்,ஏபோலா வைரஸ் பரவலாக பரவி வருகிறது. இந்த வைரஸ், விலங்குகள் இடம் இருந்து மனிதர்களுக்கு தொற்ற கூடியது. இந்த நோய்கள் உடல் உறுப்புகளை தாக்கக்கூடியது. இந்த வைரஸ் தாக்கம் குறித்து முறையாக தொடக்கத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வந்தால், நோயின் கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். இந்த நோய் தாக்கம் குறித்து முறையாக கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டினால் உயிர் இழப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த எபோலா ஆப்பிரிக்கா நாடுகளில் தற்போது வேகமாக பரவுவதை அடுத்து, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து இந்திய சுகாதாரத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் எபோலோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இன்று வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்தில், ஒருங்கிணைப்பு கூட்டத்தை இந்திய சுகாதாரத்துறை, சென்னை விமான நிலைய சுகாதாரத்துறை அலுவலர்களுடன் நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், மத்திய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எபோலோ பாதிப்பு அதிகமாக ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகள் அதிகமான பாதிப்புகள் உள்ள நாடுகளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவைகள் இல்லாவிட்டாலும், இணைப்பு விமானங்களில் செல்லைக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளோடு தொடர்புடைய நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது இணைப்பு விமானங்கள் மூலமாகவோ வரும் பயணிகளுக்கு, விமானத்தில் செல்ப் டிக்லேர்ஷன் ஃபார்ம் என்ற சுய அறிவிப்பு படிவங்களை வழங்க வேண்டும். அந்தப் படிவங்களை பெரும் விமான பயணிகள், விமானங்கள் சென்னையில் தரையிறங்குவதற்கு முன்னதாக படிவத்தை முழுமையாக நிரப்பி, விமான பணிப்பெண்கள் இடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு எபோலோ நோய், அறிகுறிகள் அதை தடுக்க வேண்டிய அவசியங்கள் குறித்து, பயணிகளுக்கு விமானங்களில் அறிவிப்புகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் விமான பயணிகள் யாருக்காவது காய்ச்சல், தலைவலி, வாந்தி வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்றவைகள் இருந்தால், அதை உடனடியாக விமான ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் விமானங்களில் இருந்து இறங்கி குடியுரிமை சோதனை பிரிவுகளுக்கு செல்லும் வழிகளில், பயணிகளின் உடல் வெப்பநிலை, உடல் நிலையை கண்காணிப்பதற்கு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பொருத்தப்பட வேண்டும். அந்தக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், பயணிகளின் உடல் நிலை வெப்பநிலை போன்றவர்களை கண்காணித்து, உடல்நலம் பாதிப்பு சோர்வுடன் வரும் பயணிகளை நிறுத்தி தனிமைப்படுத்தி, அவர்களை விசாரிக்க வேண்டும். அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளோடு தொடர்புடைய நாடுகளுக்கு சென்று வருகிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.
அதில் சந்தேகத்துக்கு இடமான பயணிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, தனி வார்டுகளில் 21 நாட்கள் தீவிர கண்காணிப்புகளில் வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு விமானங்களில் போதுமான அளவில் முக கவசங்கள், கையுரைகள், பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர்கள் போன்றவைகள், விமானங்களிலும், விமான நிலையங்களிலும் வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இருமல் சளி காய்ச்சல் இருக்கும் விமான பயணிகள் அதேபோல் விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள் மாஸ்க்குகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

