Dubai ANI
உலகம்

துபாயில் அரங்கேறிய விபரீதம்.. கண்ணெதிரே பிரிந்த உயிர்.. இந்திய இளைஞருக்கு நடந்தது என்ன?

துபாயில் உள்ள கார் ஷோரூமில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பு விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த ஷிஜின் பால், தனது எட்டு ஆண்டு காதலியை கடந்த 2025ஆம் ஆண்டு கரம்பிடித்தார். கடந்த நவம்பர் மாதத்தில் அவர் துபாய்க்கு வேலைக்குச் சென்றார். இனி வாழ்க்கையில் எல்லாம் வசந்தம்தான் என்று நினைத்திருந்த ஷிஜின், தனது முதல் விடுமுறையில் கொட்டாரக்கரை சென்று தனது மனைவியை தன்னுடனேயே துபாய்க்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஷிஜின், துபாயின் முக்கிய வர்த்தக சாலையான ஷேக் சாயித் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் மல்டிமீடியா மார்க்கெட்டிங் நிபுணராக பணியாற்றி வந்தார். அந்நிறுவனத்தின் சமூக வலைதள மேலாண்மை மற்றும் வீடியோகிராபி பொறுப்புகளையும் கவனித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gas Cylinder

இந்நிலையில் அவர் பணியாற்றிய கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், ஷிஜின் பாலின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த தருணம் குறித்து நேரில் பார்த்த சக ஊழியர் அபித் கூறியதாவது, முதலில் ஷோரூம் வளாகத்தில் தீப்பிடித்திருப்பதாக சில ஊழியர்கள் எச்சரித்தனர். இதையடுத்து ஷிஜின் பாலும் தானும் உட்பட பலர் வெளியே சென்று நிலைமையைப் பார்த்ததாக அவர் கூறினார். அப்போது அருகிலிருந்த பல கடைகளிலிருந்தும் மக்கள் தீயைக் கண்டு அங்கு திரண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் கருவிகளை பயன்படுத்தி சிலர் தீயை கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தபோதே திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக அபித் கூறினார். ஷோரூமின் ஒரு மூலையில் இருந்த நுழைவாயில் அருகே தீப்பற்றியதாகவும், அந்தப் பகுதியை ஒட்டியிருந்த வாகன சேவை மையங்கள் அருகிலேயே தீ ஏற்பட்டிருந்ததாகவும் அவர் விளக்கினார்.

Gas Cylinder

விபத்துக்கு பிறகு ஏற்பட்ட பரபரப்பில், தன்னருகிலேயே நின்றிருந்த ஷிஜின் பால் தீயில் சிக்கியிருப்பதை சிறிது நேரம் கழித்தே உணர்ந்ததாக அபித் வேதனையுடன் கூறினார். இந்த விபத்தில் ஷிஜின் பால் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஷிஜின் பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன. இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2023 முதல் 2025 வரை வெளிநாடுகளில் பணியிட விபத்துகளில் 800-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் சுமார் 55 சதவீத உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளில் பதிவாகியுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவில் அதிகபட்சமாக 182 இந்தியர்கள் பணியிட விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 128 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.