சீனாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைச் சோதித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாக்கலாம்.
இந்தியா முதன்முதலில் அணுஆயுத சோதனையை மே மாதம் 18-ஆம் தேதி 1974-ஆம் ஆண்டு (Pokhran) பொக்ரானில் நடத்தியது. இந்த சோதனைக்கு 'Smiling Buddha' என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு, இந்தியா மே மாதம் 11 மற்றும் 13-ஆம் தேதி 1998-ஆம் ஆண்டில் மேலும் ஐந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டது, இது (Pokhran) 'பொக்ரான்-II' அல்லது 'Operation Sakthi' என்று அழைக்கப்படுகிறது. பொக்ரான் என்பது ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலுள்ள செய்தி தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், 33 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா அணு ஆயுத சோதனையை துவங்குகிறது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பேட்டியின் போது அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனையை நடத்துகின்றன. ஆனால் அவர்கள் இதை வெளிப்படையாக பேசவில்லை. நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதால் இதை பேசுகிறோம். மக்களுக்கு தெரியாதவாறு, அவர்கள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்கின்றனர். நீங்கள் சிறிதளவு மட்டுமே அதிர்வுகளை உணர்கிறீர்கள். உலகளாவிய கண்காணிப்புகள் இருந்தாலும், இத்தகைய அணு ஆயுத சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும் என்கிறார்.
மேலும், நாங்களும் இந்த அணு ஆயுத சோதனையை நடத்த இருக்கிறோம், ஏனென்றால் பாக். சீனா, வடகொரியா, ரஷ்ய நாடுகள் நடத்துகின்றனர். அவர்கள் சோதனை செய்வதாலும், மற்றவர்கள் சோதனை செய்வதாலும் நாங்களும் சோதனை செய்ய இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறேன், வடகொரியாவும் சோதனை செய்து வருகிறது, பாகிஸ்தானும் சோதனை செய்து வருகிறது என்று உறுதியாக டிரம்ப் கூறினார்.
அதுமட்டுமில்லாமல், இந்த நாடுகள் எங்கு சோதனை நடத்துகின்றன என்பது அமெரிக்காவுக்கு தெரியாது. ஆனால் சோதனையை அவர்கள் நடத்துகிறார்கள். சோதனை செய்யாத ஒரேநாடு அமெரிக்கா தான். சோதனை செய்யாத ஒரே நாடாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. மற்ற நாடுகளின் சோதனை காரணமாக, நாங்களும் சோதனை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். அந்த செயல்முறை உடனடியாக தொடங்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைச் சோதித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாகலாம். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. மேலும், 1998க்கு பிறகு இந்தியா எந்தவொரு அணு ஆயுதச் சோதனையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025 நிலவரப்படி, இந்தியாவிடம் சுமார் 180 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.. பாகிஸ்தானிடமும் கிட்டத்தட்ட இதே அளவு அணு ஆயுதங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதேநேரம் சீனாவிடம் இப்போது சுமார் 600 அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. உலகளவிலான இந்த அணு ஆயுத சோதனை ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தினாலும், இந்த சோதனையானது சோதனையளவிலேயே முடிவடைய வேண்டும் என்பதே உலக நாட்டு மக்களின் எண்ணமாக இருக்கிறது.