‘அணு ஆயுத சோதனைகள் மீண்டும் தொடரும்’ - வடகொரிய அதிபர் திடீர் அறிவிப்பு
நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடரப் போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று, அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா இனி ஈடுபடாது என அறிவித்த கிம் ஜாங் உன், உலக நாடுகளுடன் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இதற்காக தங்கள் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கிம் ஜாங் உன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அணு ஆயுதங்களை முழுமையாக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே அது பற்றி பரிசீலிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடகொரிய ராணுவ அதிகாரிகளுடன் பேசிய கிம் ஜாங் உன், இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்றும், வடகொரியா தயாரிக்கவுள்ள புதிய அணு ஆயுதங்களை உலக நாடுகள் இனி காணும் என்றும் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பால் மீண்டும் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

