ஜெலோன்ஸ்கி, ட்ரம்ப், புதின் எக்ஸ் தளம்
உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை | சரண்டைந்த உக்ரைன்.. ரஷ்யாவை எச்சரித்த ட்ரம்ப்!

உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் பொருளாதார பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் என ரஷ்யாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வகையில், முதல்படியாக 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

புதின், ஜெலன்ஸ்கி

இந்த நிலையில் ரஷ்யா தற்போது இன்னும் பிடிகொடுக்காமல் உள்ளது. எனவே ரஷ்யாவுடன் நேரில் பேச தனது 4 பிரதிநிதிகளை மாஸ்கோவுக்கு ட்ரம்ப் அனுப்பியுள்ளார். போர் நிறுத்தத் திட்டங்கள் குறித்து இவர்கள் ரஷ்யாவிடம் விளக்க உள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், ”தாங்கள் வகுத்துக்கொடுத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்கும். ஒருவேளை போர் நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால், ரஷ்யா பொருளாதார ரீதியான பாதிப்புகளைச் சந்திக்கும். அது அந்நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்” என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

சில வாரங்களுக்கு முன்வரை அமெரிக்காவுக்கு இணக்கமாக ரஷ்யாவும் எதிராக உக்ரைனும் இருந்தன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, உக்ரைனின் இந்த போர் நிறுத்த முடிவை ரஷ்யா விமர்சித்துள்ள நிலையில், ’உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்கக் கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்குச் சொந்தமானது’ உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.