மெக்சிகோ, கனடா, சீன கொடிகள் - டொனால்ட் ட்ரம்ப் கோப்புப்படம்
உலகம்

சீனா உட்பட 3 நாடுகளுக்கு செக்.. பதவியேற்றவுடன் முதல் கையெழுத்து இதுதானா? அதிரடியில் இறங்கிய ட்ரம்ப்!

”கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

பதவியேற்கும் நாளில் ட்ரம்பின் முதல் கையெழுத்து

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தற்போதே அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், “கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க இருக்கும் ட்ரம்ப், முக்கியமான சில கோப்புகளில் கையெழுத்திட இருக்கிறார். அதில் ஒன்றாக, ‘கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். இது நான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் ஒன்றாக இருக்கும்’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி

இதுகுறித்து அவர், “ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களால் போதை மருந்து கடத்தல்கள் மற்றும் குற்றங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. அதை அனைவரும் அறிவர். இதற்கு முன்னதாக இதுபோன்று நடந்தது கிடையாது. ஜனவரி 20ஆம் தேதி என்னுடைய முதல் நிர்வாக உத்தரவில் மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 25 சதவீதம் வரிவிதிக்கப்படும். அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்தப் பதிவுக்கு சீனாவும் கனடாவும் உடனடி பதிலைத் தந்துள்ளன. இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, “வர்த்தகப் போரில் யாரும் வெற்றிபெற மாட்டார்கள். சீனா-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இயற்கையில் பரஸ்பர நன்மை பயக்கும் என்று சீனா நம்புகிறது” என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியா ஃப்ரீலேண்டு

உடனே பதிலளித்த கனடா துணை பிரதமர்

அதுபோல் கனடாவின் துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டு, “அமெரிக்க எரிசக்தி விநியோகங்களுக்கு இது அத்தியாவசியம். இந்த உறவு அமெரிக்க தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும். இந்தப் பிரச்னைகளை வரும் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்ந்து விவாதிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட் துணைத் தலைவரும் முன்னாள் அமெரிக்க வர்த்தக அதிகாரியுமான வெண்டி கட்லர், "மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க சந்தையை பெரிதும் சார்ந்து இருக்கின்றன. எனவே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பின் அச்சுறுத்தல்களில் இருந்து விலகிச் செல்லும் திறன் குறைவாகவே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் மீண்டும் மறுபேச்சுவார்த்தை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் மூன்று தசாப்தகால கட்டற்ற வர்த்தக உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இப்போது, USMCA என அழைக்கப்படுகிறது, இது அமெரிக்க வணிகங்கள், குறிப்பாக வாகன உற்பத்தியாளர்கள் நஷ்டமடைந்து வருவதாக ட்ரம்ப் புகார் கூறியதை அடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மீண்டும் 2026இல் கனடா மற்றும் மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் (யுஎஸ்எம்சிஏ) மறுபேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

ட்ரம்ப் சீனா மீது வரி விதிப்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், இந்தப் பட்டியலில் மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை இணைந்துள்ளதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த வரி விதிப்பை அடிப்படையாக வைத்து சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுடன் வர்த்தக விதிமுறைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்ற முடியும் எனவும் நம்புகிறார்.

சீனா - அமெரிக்கா | கடந்தகால ட்ரம்ப் ஆட்சியில் நடந்தது என்ன?

கடந்தகால தன்னுடைய ஆட்சியில் சீனாவைக் கடுமையாக விமர்சித்தவர், டொனால்டு ட்ரம்ப். அந்த நாட்டுப் பொருட்களுக்கு எதிராக அதிக வரிவிதித்த அவர், சிலவற்றுக்கு தடையும் விதித்தார். மேலும், அப்பொருள்கள் அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல், ‘சீனாதான் நமக்குப் போட்டியாளர்’ என்றார். இதனால், சீனாவை உலகளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினார். தொடர்ந்து, 2019-20 பெருந்தொற்று காலத்தின்போது கோவிட்டை ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். இதன் காரணமாக சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு பெரும் பாதிப்பைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அமைந்த ஜோ பைடன் அரசு, சீனாவைத் தூரத்தில் வைத்தபோதும் ஓரளவுக்கு அணைத்துக் கொண்டது. இந்த நிலையில், அமெரிக்காவில் அமையப் போகும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சீன இறக்குமதிகளுக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனால், உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே உறவில் மேலும் நெருக்கடி ஏற்படலாம். இதன் காரணமாக அமெரிக்க - சீனா உறவுகளின் எதிர்காலம் குறித்து கணிசமான நிச்சயமற்ற நிலை உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.