ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை தாலிபன்களிடமிருந்து மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் கட்டடத்தை, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தைக் கொண்டு மோதி தகர்த்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்த தாலிபன்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு பதவியேற்றது. அங்கேயே அமெரிக்கப் படைகள் முகாமிட்டன. இதற்கிடையே ட்ரம்ப், முதல்முறையாக அமெரிக்க அதிபரானபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு, ஜோ பைடன் ஆட்சியின்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
இதையடுத்து, தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றின. தற்போது ஆட்சியில் இருக்கும் தாலிபன்கள் அங்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதை, உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை தாலிபன்களிடமிருந்து மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்குப் புவியியல் ரீதியாக அருகாமையில் இருப்பதால் அமெரிக்க பாதுகாப்புக்கு முக்கியமானதாக மாறும் இந்த விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “தாலிபன்களுக்கு எங்களிடம் இருந்து நிறைய தேவைப்படுகிறது. எனவே, அந்த விமானத் தளத்தை திரும்பப்பெற முயன்று வருகிறோம். அத்தகைய இடத்தை ஜோ பைடன் விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் நாங்கள் தளத்தை விரும்புவதற்கான காரணங்களில் ஒன்று, சீனா தனது அணு ஆயுதங்களை தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரம் தொலைவில் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விமான நிலையம் இப்போது சீனாவால் பயன்படுத்தப்படுவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இருப்பினும் தாலிபன்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
காபூலுக்கு வடக்கே சுமார் 44 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ள விமானத் தளம் சீனாவுக்கு அருகாமையில் இருப்பதால், அது அமெரிக்காவிற்கு வலிமையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் மிகப்பெரிய விமானத் தளங்களில் இதுவும் ஒன்று. அதன் 3,600 மீட்டர் ஓடுபாதை சரக்கு விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களுக்குச் சேவை செய்யும் திறன் கொண்டது. இத்தளம், ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தகாலப் போரின்போது, மிகப்பெரிய அமெரிக்க இராணுவ நிறுவலாக செயல்பட்டது. அமெரிக்கா துருப்புகள் வெளியேறிய பின்பு, இத்தளம் தற்போது ஆப்கானிஸ்தானின் தாலிபன் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.