”இந்தியாவுக்கு 50% வரி விதித்தது விரிசலை ஏற்படுத்திவிட்டது” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தவில்லை. இதனால் அமெரிக்க - இந்திய உறவுகள் விரிசலைச் சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, அமெரிக்கப் பயணத்தைப் பிரதமர் மோடி தவிர்த்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் 80வது உயர்மட்ட பொதுக் கூட்டம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இதில், செப்டம்பர் 27ஆம் தேதி இந்தியா சார்பில் பிரதமர் மோடி பேசவிருந்தார். இந்தச் சூழலில் ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் (SCO) சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இணைந்து கலந்துரையாடினர். இது, அமெரிக்காவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தவிர, ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்க - இந்திய உறவுகளைச் சீர்குலைத்து, சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு பன்முக கூட்டணியை நோக்கித் தள்ளின. இது இந்தியா-ரஷ்யா-சீனா உறவுகளை தற்செயலாக நெருக்கமாக வளர்த்துள்ளது.
ட்ரம்பின் கடுமையான கொள்கைகள், தண்டனை வரிகள் மற்றும் இழிவான கருத்துகளே இந்திய - அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலான அந்த உறவை அமெரிக்கா இழந்ததோடு, அதை ரஷ்யாவிற்கும் சீனாவுக்கும் ஏற்படுத்திக் கொடுத்த பங்கு ட்ரம்பையே சேரும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், இந்தியாவின் பொருளாதாரம் இறந்துவிட்டதாகக் கூறியதாகவும் ட்ரம்ப் கூறியது வெறுப்பை மேலும் தூண்டிவிட்டது. தவிர, ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, அண்டை நாடான பாகிஸ்தானிடமே அமெரிக்கா அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறது. அந்த நாட்டு ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் உணவருந்தியது பேசுபொருளானது. இப்படி, இந்திய - அமெரிக்க நாட்டு இரு உறவு விரிசலுக்குக் காரணமாக ட்ரம்பே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் அவர், இந்திய உறவு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். இது எளிதான காரியம் அல்ல. அது மிகப்பெரிய விஷயம். அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் அதைச் செய்தேன். நிறைய செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உண்மையில், இந்தியாவின் உறவை ட்ரம்ப் 50% இழந்துவிட்டாலும், அதற்கு, 50% தாம்தான் காரணம் என்பதை அவர் எப்போது உணரப்போகிறாரோ?