அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. சில நாடுகள், தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் அமெரிக்க திரைப்படங்களுக்கு சலுகை வழங்குகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நிகழும் காட்டுத்தீ உள்ளிட்ட விபத்துகளின் காரணமாகவும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.
இதனால் ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து அமெரிக்கப் படங்களைத் தயாரிப்பதாகவும் இந்தப் போக்கினால் அமெரிக்க திரையிலகம் வேகமாக அழிந்துவருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து தயாரிக்கப்படும் திரைப்படங்களால் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிபரின் இந்த நடவடிக்கையை பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஹாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸில் 75%க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு வெளியே இருந்து வருகின்றன. மேலும் அந்த படங்களின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க பகுதி அமெரிக்காவிற்கு வெளியே செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து படங்களுக்கும் டிரம்ப் 100% வரி விதிப்பது ஹாலிவுட்டை அமெரிக்காவிற்கு வெளியே நகர்த்த ஊக்குவிக்கக்கூடும்” எனப் பதிவிட்டுள்ளார்.