போப்பாண்டவர் உடையில் டொனால்டு ட்ரம்ப்.. எதிர்வினையாற்றிய பயனர்கள்!
கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), காலமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவர் பற்றிய நடைமுறைகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், வரும் 7ஆம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர்.
இந்த நிலையில், புதிய போப் தேர்வு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" எனச் சமீபத்தில் நகைச்சுவையாய் பதிலளித்திருந்தார். இது, இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், போப்பாண்டவர் உடையில் தாம் அமர்ந்திருக்கும் AI-உருவாக்கிய படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்தப் படத்தை, வெள்ளை மாளிகையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பொதுவாக ஒரு பகுதி பயனர்கள், “இந்தப் பதிவு அவமரியாதைக்குரியது” என்றும், “ட்ரம்ப் போப் பிரான்சிஸின் மரணத்தை கேலி செய்கிறார்” என்றும் தெரிவித்துள்ளனர்.