கிம் ஜாங் உன், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

வடகொரிய அதிபரைச் சந்திக்க டொனால்டு ட்ரம்ப் திட்டம்!

வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’ஐ மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்காவில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “கிம் ஒரு புத்திசாலி. அவர் மதவெறியர் அல்ல. ரஷ்ய அதிபருடன் அணு ஆயுதங்கள் அழிப்பு தொடர்பாக ஒப்பந்தம் போட முயன்றோம். அதற்குள் எங்கள் நாட்டில் தேர்தல் வந்துவிட்டது. கிம் ஜாங் உன் சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்” எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப், கிம் ஜாங் உன்

டொனால்டு ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலத்தின்போது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துள்ளார். இந்த நிலையில், இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்றிருக்கும் ட்ரம்ப், கிம் ஜாங் உடனான உறவை நீட்டித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா அடிக்கடி அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

எல்லைப் பிரச்னை காரணமாக சமீபகாலமாக தென் கொரியாவுடனான உறவை வட கொரியா முற்றிலும் துண்டித்துள்ளது. என்றாலும், தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டித்து வருகிறது. ஜப்பானும் ஆதரவு அளித்து வருகிறது. இது பிடிக்காமலேயே வடகொரியா அணு ஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய அணு ஆயுதங்களை அதன் நட்பு நாடான ரஷ்யாவுக்கும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில்தான், இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் ட்ரம்ப், கிம் ஜாங் உடனான பழைய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அணு ஆயுத அழிப்பு தொடர்பாக மீண்டும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.