வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ட்ரம்பின் உத்தரவை கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன.
அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
தென் அமெரிக்காவில் உள்ள நாடான வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்கள் பசிபிக் பெருங்கடல், மெக்சிகோ வழியாகவும் மறுபுறம் ஜமைக்கா, கியூபா வழியாகவும் கடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. வெனிசுலாவில் இருந்து படகுகள், சிறு கப்பல்கள் வழியாக போதைப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதாகக் கூறும் அமெரிக்கா, இது போன்று வருபவர்களை தாக்குகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில், தங்கள் நாட்டிற்குள் போதை மருந்துகளை கடத்திவருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிவரும் நிலையில், அதை வெனிசுலா மறுக்கிறது. போதைக் கும்பல்களை அமெரிக்கா தாக்கி அழிப்பதோடு, வெனிசுலாவை தாக்கக்கூடும் என்றும் தகவல்கள் உள்ளன. ஆனால், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவை எதிர்த்து போராடப் போவதாக கூறியுள்ளார். இதற்கிடையே, வெனிசுலா அருகே கரீபியன் கடலில் அதிக அளவிலான போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும், படை வீரர்களையும் அமெரிக்கா குவித்து வருகிறது. இதன்மூலம் வெனிசுலா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்பின் கருத்துக்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’எங்கள் நாட்டின் வான்பரப்பை என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை; ட்ரம்ப்பின் பேச்சு சர்வதேச சட்டத்திற்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல்’ என்று வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையை மற்ற நாடுகள் கண்டிக்க வேண்டும் எனவும் வெனிசுலா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வெனிசுலா மீதான வான்வெளியை மூடுவதற்கான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச முடிவை கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. இதுகுறித்து கியூப வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பாரில்லா, ”வெனிசுலா வான்வெளியை மூடுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் அறிவிப்பை நாங்கள் திட்டவட்டமாக கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கை, பொலிவேரியன் குடியரசிற்கு எதிரான சட்டவிரோத இராணுவத் தாக்குதலுக்கு ஆபத்தான முன்னோடி. இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன, மேலும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், முழு சர்வதேச சமூகமும் இதற்கு வலுவான மறுப்பை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரானும் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.
இதற்கிடையே, மதுரோ அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து வெனிசுலா குடியேறிகளை நாடு கடத்தும் விமானங்களை நிறுத்தியுள்ளது. இது ட்ரம்பின் வெகுஜன நாடு கடத்தல் இயக்கத்தின் ஒரு முக்கியக் கொள்கையாகும். மேலும் கடலோர பாதுகாப்புகளையும் வெனிசுலா அணி திரட்டியுள்ளது. அதுதொடர்பான பயிற்சிகளின் காட்சிகளை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளது. இதன் காரணமாக கரீபியன் கடற்பரப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.