உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால், இதை இந்தியா மறுத்திருந்தது.
இந்தச் சூழலில், அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் மூனீர், போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்புவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகின. ஆனால், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என ஆதங்கப்பட்டார். ”நான் அதை நான்கு அல்லது ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான பட்டி கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். ’இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது என்பது தகுதியான ஒருவர், முறையாக பரிசீலனைக்கு ஒரு பெயரைச் சமர்ப்பித்துள்ளார் என்பதாகும்.
இது ஒப்புதல் அல்லது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதைக் குறிக்காது. ஏனெனில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். நோபல் குழு உள்ளீடுகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்கிறது, மேலும் அக்டோபரில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குறுகிய பட்டியல் மற்றும் வெற்றியாளர் மட்டுமே உண்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர்களில் தற்போது வரை 1906இல் தியோடர் ரூஸ்வெல்ட், 1919இல் உட்ரோ வில்சன் மற்றும் 2009இல் பராக் ஒபாமா ஆகியோர் மட்டுமே பெற்றுள்ளனர்.