பாகிஸ்தான் | இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை! ஆதரித்தது யார் தெரியுமா?
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். இதற்கிடையே நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த இம்ரான்கான், ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. நார்வே அரசியல் கட்சியான பார்டியட் சென்ட்ரமின் வழக்கறிஞர்கள் பிரிவு, இந்தப் பரிந்துரையை வழங்கி இருக்கிறது.
இதுதொடர்பாக அந்தக் கட்சி தனது எக்ஸ் தளத்தில், ”பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் செய்த பணிகளுக்காக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து இருக்கிறோம்” என கூறியுள்ளது. முன்னதாக, தெற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த இம்ரான்கான் மேற்கொண்ட பணிகளுக்காக கடந்த 2019-ஆம் ஆண்டும் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.